"கோவில்களை இடிக்க தடை விதிக்க வேண்டும்" - இந்துமுன்னணி வழக்கு!

Update: 2022-02-07 08:30 GMT

"ஆக்கிரமிப்பில் உள்ள கோயில்கள் என கூறப்படும் கோயில்களை முன்னறிவிப்பின்றி இடிக்க தடை விதிக்க வேண்டும். அவ்வாறு உள்ள கோவில்களை முறைப்படுத்தவும், இடமாற்றம் செய்யவும், சரியான செயல் திட்டத்தை உருவாக்க உத்தரவிட வேண்டும்" என்று  சென்னை உயர்நீதிமன்றத்தில் இந்து முன்னணி செய்தி தொடர்பாளர் இளங்கோ மனு அளித்துள்ளார்.


தி.மு.க அரசு பொறுப்பேற்றது முதல் பழமைவாய்ந்த, தொன்மைவாய்ந்த,  இந்து மக்களின் உணர்வுகளில் பின்னிப் பிணைந்த ஆலயங்களை இடித்து வருகிறது என்று பலரும் குற்றச்சாட்டு எழுப்பி வருகின்றனர். ஜே.சி.பி இயந்திரத்துடன் கோயில் கட்டிடங்களை தகர்க்கும்  காணொளிகள், இந்து மக்கள் உணர்வுகளை புண்படுத்தும் வகையில் இருந்தது.

இதனால் இந்து மக்களின் உணர்வுகளை புண்படுத்தாத வகையில் தி.மு.க அரசு செயல்பட வேண்டும் என்ற நோக்கில், சென்னை உயர்நீதிமன்றத்தில் இந்து முன்னணி அமைப்பின் செய்தித் தொடர்பாளர் இளங்கோ அவர்கள் மனு அளித்துள்ளார்  அதில் :

தி.மு.க அரசு பொறுப்பேற்றதில் இருந்து பதினாறு கோயில்கள் இடிக்கப்பட்டுள்ளன. கோயில்களை புதுப்பிக்கும் நோக்கில் இடிக்கப்பட்டதாக இந்து சமய அறநிலையத்துறை தரப்பில் கூறப்படுகிறது. இதர கோயில்கள் புறம்போக்கு நிலத்திலும் நீர்நிலைகளின் அருகாமையில் ஆக்கிரமிப்பு நிலத்திலும் கட்டப்பட்டதால் பேரிடர் மேலாண்மை விதி 2006ன்கீழ்  இக்கோயில்கள் இடிக்கப்பட்டதாக  காரணம் தெரிவித்துள்ளது.

ஆகையால் ஆக்கிரமிப்பில் உள்ள கோயில்கள் என வகைப்படுத்தப்படும் கோவில்களை முன்னறிவிப்பின்றி இடிக்க தடை விதிக்க வேண்டும். அவ்வாறு உள்ள கோவில்களை முறைப்படுத்தவும், இடமாற்றம் செய்யவும்  சரியான செயல் திட்டத்தை உருவாக்க உத்தரவிட வேண்டும் என்று மனுவில் கூறியுள்ளார்.

Tags:    

Similar News