சேலத்தில் 'மோடி இட்லி' கடைகளுக்கு மக்கள் இடையே பெருகி வரும் மவுசு: வயிறு நிறைய சாப்பிட்டு வாழ்த்து கூறும் மக்கள்.!

சேலத்தில் 'மோடி இட்லி' கடைகளுக்கு மக்கள் இடையே பெருகி வரும் மவுசு: வயிறு நிறைய சாப்பிட்டு வாழ்த்து கூறும் மக்கள்.!

Update: 2020-12-13 14:08 GMT

சேலம் நகரம் ஏராளமான தினசரி கூலி தொழிலாளர்கள் நிறைந்த பகுதியாகும் . அதுவும் ஒரு நாளைக்கு இங்குள்ளவர்களின் சராசரி வருமானம் 100 முதல் 150 க்குள்தான் என கூறப்படுகிறது. 

குறிப்பாக ஏராளமான நெசவாளர்கள் வசிக்கும் அம்மாபேட்டை, பொன்னம்மாப்பேட்டை, கிச்சிப்பாளையம் பகுதிகளில் மலிவு விலை உணவகங்கள் ஏற்கனவே நிறைய உள்ளன. 10 ரூபாய்க்கு நான்கு தோசை, பத்து ரூபாய்க்கு நான்கு இட்லி என வீட்டுக் குள்ளேயே தயாரித்து அங்கேயே விற்கும் கடைகள் நிறைய உண்டு. 

மேலும் தமிழகத்திலேயே, பையில் இருபது ரூபாய் இருந்தால் போதும் வயிறார சாப்பிடும் அளவுக்கு குறைந்த விலை உணவுகள் மக்களுக்கு கிடைக்கும் இடம் சேலம்தான் எனக் கூறப்படுகிறது.

இதுபோல ஆந்திர எல்லைப் பகுதிகளான குப்பம், சித்தூர் கிராமப் பகுதிகளை குறிப்பிடுகின்றனர். இன்னமும் அங்கு டீ 5 ரூபாய்க்கும், சாப்பாடு 10 ரூபாய் முதல் 20 ரூபாய் வரை கிடைப்பதாக கூறுகின்றனர். என்றாலும் ஒரு மாநகரப் பகுதியான சேலத்தில் டிபன்கள் ஆகட்டும், சாப்பாடு ஆகட்டும் பெரிய ஹோட்டல்களில் அளிக்கப்படும் சட்னி சாம்பார், ஒரு வித காரசட்னி போலவே இங்கும் அளிக்கின்றனர். 

இது இவர்களுக்கு மட்டும் எப்படி கட்டுப்படியாகிறதோ என நாம் வியந்து கொண்டிருக்கிற நேரத்தில் கோவையில் கமலாத்தா என்கிற 80 வயதான பாட்டி இன்னும் ஒரு ரூபாய்க்கு ஒரு இட்லி என்ற விலையில்,சட்னி சாம்பாருடன் சுட சுட விற்பனை செய்வதாக டெல்லியில் உள்ள பிரதமர் வரை செய்தி சென்று சேர்ந்திருக்கிறது.  அவரை பிரதமர் வெகுவாக பாராட்டியுள்ளார். அந்த கடையை விடாமல் நடத்த சில உதவிகள் மாநில அரசு தரப்பில் செய்துள்ளதாகவும் செய்திகள் வந்துள்ளன.  இந்நிலையில் சேலம் நகரத்தின் மிக முக்கியப் பகுதியான முள்ளுவாடி பகுதியில்

ஒரு வாடகை கட்டிடத்தில் அதி நவீன முறைகளில் இட்லி தயாரித்து மற்ற மிகப்பெரிய உணவகங்களில் வழங்கப்படும் அதே தரத்துடன், பலவகை சட்டினி மற்றும் சாம்பாருடன் மலிவு விலை இட்லி கடை தொடங்கப்பட்டுள்ளது. 

ஒரு நாளைக்கு காலை 7 மணி முதல் 10 மணி வரை சுமார் 5 ஆயிரம் இட்லிகள் வரை விற்பனை செய்கிறார்கள். உட்கார்ந்து சாப்பிட நல்ல வசதி செய்யப்பட்டிருக்கும் இங்கு 10 ரூபாய்க்கு நான்கு இட்லி கிடைப்பதாக பெருமையுடன் கூறுகிறார்கள் இப்பகுதி மக்கள்.  மோடி இட்லி என்று பிரதமரின்  பெயரில் விற்கப்படும் இந்த குறைந்த விலை இட்லி மிகவும் தரமானதாகவும், ருசியுடன் உள்ளதாகவும் கூறுகின்றனர். 

ஏழை எளிய மக்கள் மற்றும் கூலித் தொழிலாளர்களுக்கு உதவும் வகையில் தமிழக பாஜக பிரச்சாரப் பிரிவு துணைத் தலைவர் சேலம் மஹேஷ் என்பவர் இந்த மலிவு விலை இட்லி கடையை நடத்துகிறார். இங்கு மட்டுமல்லாமல் இதே போல 10 இடங்களில் தொடங்கி ஏழை மக்களின் நலனுக்காக நடத்துவதாக பிரபல ஊடகங்களில் செய்திகள் வந்துள்ளன.   

பணம் சம்பாதிப்பதை விட சாதாரண மக்களின் பசிப்பிணி அகற்றும் இவர்களை மனிதர்களுக்குள் தெய்வங்களாக மக்கள் கருதுகின்றனர் என்பதுதான் உண்மையாகும்.

https://www.polimernews.com/amp/news-article.php?id=130405&cid=10

Similar News