இங்கிலாந்தில் இருந்து தமிழகம் வந்த 205 பேரை தேடும் பணி தீவிரம்.. சுகாதாரத்துறை தகவல்.!

இங்கிலாந்தில் இருந்து தமிழகம் வந்த 205 பேரை தேடும் பணி தீவிரம்.. சுகாதாரத்துறை தகவல்.!

Update: 2021-01-02 09:56 GMT

புதியதாக உருமாறிய கொரோனா வைரஸ் இங்கிலாந்தில் கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து இந்தியா உட்பட பல நாடுகள் இங்கிலாந்தில் இருந்து தமிழகம் வருபவர்களை தீவிரமாக சோதனை செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் தமிழகம் வந்த 205 பேர் இதுவரை கண்டறியப்படவில்லை. செல்போன் சிக்னல் வைத்து இவர்களை தேடுவதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இங்கிலாந்தில் உருமாறிய கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்ததை தொடர்ந்து கடந்த 21ம் தேதி அந்த நாட்டு உடனான விமானப் போக்குவரத்துக்கு மத்திய அரசு தடை விதித்தது. ஆனால் அதற்கு முன்பு இங்கிலாந்தில் இருந்து தமிழகம் வந்தவர்களை கண்டறிந்து தனிமைப்படுத்தும் பணிகளை தமிழக அரசு தீவிரப்படுத்தியுள்ளது. விமானங்கள் மூலம் நேரடியாக பிரிட்டனிலிருந்தோ அல்லது வேறு மாநிலங்களிலிருந்தோ வந்தவர்களின் இ பாஸ் விவரங்கள் சம்பந்தப்பட்ட மாவட்ட நிர்வாகம் மற்றும் பொது சுகாதாரத்துறையிடம் பகிரப்பட்டது. 

இந்தச் சூழலில் இங்கிலாந்தில் இருந்து வந்த 205 பேரை இன்னும் கண்டறியவில்லை. இங்கிலாந்தில் இருந்து நேரடியாக தமிழகம் வராமல் டெல்லி, ஹைதராபாத், பெங்களூர் போன்ற நகரங்களில் இருந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் விமானம் மூலமாகவோ, ரயில் அல்லது கார் உள்ளிட்ட தரை வழிப்பயணமோ பலர் வந்திருப்பதால் அவர்களை கண்டறிவது சவாலாக உள்ளது என்று சுகாதாரத் துறை கூறியது.

சிலர் பாஸ்போர்ட்டிலும் பெற்றோர் வீட்டின் முகவரி, உறவினர் முகவரி, வாடகைக்கு குடியிருந்த முகவரி ஆகியவற்றை கொடுத்திருப்பதால் அவர்களை கண்டறிவதில் இழுபறி நீடிக்கிறது. இதனால் தொலைபேசி எண்களின் சிக்னல்கள் எந்த பகுதியில் செயல்பட்டு வருகின்றன என்பதை ஆய்வு செய்யும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

பிரிட்டனில் இருந்து வந்தவர்கள் 104 உதவி எண் மூலமாக தாமாகவே முன் வந்து கொரோனா சோதனைக்கு உட்படுத்தி கொள்ள வேண்டும் என்பதே சுகாதார துறையின் அறிவுறுத்தலாக உள்ளது. புதிய வகை கொரோனா நாட்டில் பரவுவதை தடுப்பது ஒவ்வொரு இந்தியர்களின் கடமையும் கூட. எனவே புதியதாக யாரேனும் தங்கள் பகுதிகளுக்கு வந்திருந்தால் அவர்கள் பற்றிய விவரங்களை சுகாதாரத்துறைக்கு தெரியபடுத்துங்கள்.

Similar News