குடிநீர் தொட்டியில் பூச்சி மருந்து, பொதுமக்கள் அதிர்ச்சி - நாமக்கல் சம்பவத்திற்கு என்ன காரணம்?
பொதுமக்களுக்கு குடிநீர் வழங்கும் குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் இருந்து வீடுகளுக்கு செல்லக்கூடிய குடிநீர் குழாயில் விஷம் கலக்கப்பட்டு, குடிதண்ணீரில் பூச்சி மருந்து துர்நாற்றம் வீசியதை கண்டு பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூரை அருகே வீரணம்பாளையம் பஞ்சாயத்திற்குட்பட்ட கன்னிமார் கோயில் பகுதியில் 50க்கும் அதிகமான வீடுகள் உள்ளது. இங்குள்ள குடியிருப்பு பகுதிகளுக்கு குடிநீர் சப்ளை செய்வதற்காக அப்பகுதியில் 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்கப்பட்டுள்ளது.
இங்கு இருந்து பல்வேறு பகுதிகளாக பிரித்து வெவ்வேறு வீடுகளுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. அதே போன்று வழக்கம்போன்று நேற்று காலை (ஜூன் 22) வீடுகளுக்கு குடிநீர் வழங்கப்பட்டது. அப்போது ஒரு சில வீடுகளில் மட்டும் விவசாய பயிர்களுக்கு தெளிக்கின்ற பூச்சி மருந்து வாடை தண்ணீரில் வந்துள்ளது. இதனை பார்த்த அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்தனர்.
இதனை தொடர்ந்து உடனடியாக ஊராட்சி மன்ற தலைவருக்கு தகவல் அளிக்கப்பட்டது. இதன் பின்னர் சம்பவ இடத்திற்கு சென்று ஊராட்சி மன்றத் தலைவர் வீடுகளுக்கு செல்லும் தண்ணீர் பைப்பை அடைத்தார். இது தொடர்பாக பரமத்தி காவல் நிலைய காவல் நிலையத்துக்கு தகவல் கொடுத்தார். தகவலை தொடர்ந்து வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் வருவாய்த்துறையினருக்கும் தகவல் அளித்திருந்தார்.
மேலும், சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் மற்றும் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் கூறும்போது, மேல்நிலை தண்ணீர் தொட்டியில் மருந்து கலக்கப்படவில்லை எனவும் குறிப்பிட்ட ஒரு பகுதியில் மட்டும் பூச்சி மருந்து கலந்திருப்பது குழப்பத்தை ஏற்படுத்தும் விதமாக அமைந்துள்ளது. அதாவது இந்த சம்பவம் திட்டமிட்டு செய்யப்பட்டதா, அல்லது முன்பகை காரணமாக பழிதீர்ப்பதற்காக இப்படி யாரேனும் இது போன்ற காரியங்களில் ஈடுபட்டனரா என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Source, Image Courtesy: Vikatan