கோவிலை இடிப்பதை எதிர்த்து தி.மு.க எம்.எல்.ஏ போராட்டம் - இந்து ஆதரவு நாடகமா.?

கோவிலை இடிப்பதை எதிர்த்து தி.மு.க எம்.எல்.ஏ போராட்டம் - இந்து ஆதரவு நாடகமா.?

Update: 2020-11-18 17:58 GMT

வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் இந்து விரோதி என்ற அடையாளத்தால் தோற்று விடுவோமோ என்ற அச்சத்தில் தி.மு.கவினர் பல நாடகங்களை நடத்தி வருகின்றனர். சில நாட்களுக்கு முன்பு கூட பா.ஜ.க வேல் யாத்திரையை தொடங்க இருந்த சமயத்தில் சென்னை துறைமுகம் தொகுதி தி.மு.க எம்.எல்.ஏ சேகர்பாபு வேல் யாத்திரைக்கு போட்டியாக விளக்கு பூஜை நடத்தினார்.

இது சமூக ஊடகங்களில் பரபரப்பாக பேசப்பட்ட நிலையில் அதை தூக்கி சாப்பிடும் விதமாக தூத்துக்குடி எம்.எல்.ஏ கீதா ஜீவன் ஒரு செயலைச் செய்திருக்கிறார்.

தூத்துக்குடி மாவட்டத்தில் ஸ்டேட் பாங்க் காலனி அருகே 60 அடி சாலையின் ஓரத்தில் சக்தி விநாயகர் கோவில் அமைந்துள்ளது. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் இந்த சாலையை ஒட்டி 6 அடி அகலத்திற்கு மழைநீர் வடிகால் அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.

இதற்கு இடையூறாக விநாயகர் கோவில் அமைந்துள்ளதால் தூத்துக்குடி மாநகராட்சி நிர்வாகம் கோவிலை அகற்ற முடிவு செய்ததாக கூறப்படுகிறது. இதற்காக கோவிலை இடிக்க மாநகராட்சி பணியாளர்கள் ஜே.சி.பி இயந்திரத்துடன் வந்துள்ளனர்.

 ஆனால் கோவில் இடிக்கப்படப் போவதை அறிந்த அப்பகுதி மக்கள் அந்த இடத்தில் குவிந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக வந்த தூத்துக்குடி எம்.எல்.ஏ கீதா ஜீவன் போராட்டம் செய்து கொண்டிருந்த மக்களோடு மக்களாக அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டுள்ளார்.

விநாயகர் கோவில் இருக்கும் இடம் பா.ஜ.க மாநில செயற்குழு உறுப்பினர் எம்.ஆர்.கனகராஜுக்கு சொந்தமானது என்று கூறப்படுகிறது. அவர்தான் கோவிலை பராமரித்து வருவதாக கூறப்படுகிறது. எனவே ஏராளமான மக்கள் அவர் தலைமையில் கூடி போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.

 நிலைமை இவ்வாறு இருக்கும்போது மக்கள் கூடி போராட்டம் செய்வதை பார்த்துவிட்டு தி.மு.க எம்.எல்.ஏ கீதா ஜீவன் தானாக வந்து போராட்டத்தில் சேர்ந்து கொண்டார் என்று கூறப்படுகிறது. போராட்டத்தை கைவிட கோரி மாநகராட்சி அதிகாரிகளும் காவல்துறை அதிகாரிகளும் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில் கோவில் இடிக்கப்படாது என உறுதி அளித்தால்தான் போராட்டத்தை கைவிடுவோம் என்று மக்கள் போராட்டத்தைத் தொடர்ந்துள்ளனர்.
 

இதையடுத்து மாநகராட்சி ஆணையர் தி.மு.க எம்.எல்.ஏ கீதாஜீவனிடம் இப்போது கோவில் இடிக்கப்படாது என்றும் மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகள் தொடங்கும் போது இதைப் பற்றி பேசிக் கொள்ளலாம் என்றும் சமாதானம் பேசியுள்ளார்.

இதையடுத்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றதாகக் கூறப்படுகிறது. இந்து விரோதி அடையாளத்தை மாற்றும் முயற்சியில்தான் கீதாஜீவன் போராட்டத்தில் கலந்து கொண்டால் என்று ஒரு தரப்பும் போராட்டத்தில் கலந்து கொள்வது போல் காட்டிக்கொண்டு மக்களை கலைந்து செல்ல வைத்துவிட்டார் என்று ஒரு தரப்பும் இந்த சம்பவம் குறித்து விமர்சித்து வருகின்றனர்.

Similar News