தான் வாழ்வதற்கு மற்ற இனங்களை வேரோடு அழிக்கும்.. உள்ளூர் மீன்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் ஆப்பிரிக்க கெளுத்தி.!

தான் வாழ்வதற்கு மற்ற இனங்களை வேரோடு அழிக்கும்.. உள்ளூர் மீன்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் ஆப்பிரிக்க கெளுத்தி.!

Update: 2020-12-29 11:53 GMT

தான் வாழ பிற மீன்களை அடியோடு சாப்பிட்டு, நாட்டு மீன்களை அழிக்கும் கெளுத்தி மீன்கள். தான் வாழ்வதற்காக பிற மீன் இனங்களை குடியோடு அழிக்கும் ஆப்பிரிக்க கெளுத்தி மீன்களை வளர்ப்பதை நிறுத்த வேண்டும் என மீனவர்களுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நமது நாட்டில், ஏரி, குளங்கள் அதிகளவு உள்ளது. இதில் மீன் வளர்ப்பு மிக பிரதான தொழிலாகவும் பார்க்கப்படுகிறது. நமது கிராம ஏரிகளில் கெளுத்தி மீன்கள் இருப்பதை அனைவரும் பார்த்திருப்போம். அதனின் குழம்பு மிகவும் ருசியாக இருக்கும். சாப்பிட்டால் மிகவும் சத்து கிடைக்கும். இந்நிலையில், சமீபகாலமாக நமது நீர்நிலைகளில் ஆப்பிரிக்க வகையான கெளுத்தி மீன் இனங்களை வளர்க்க தொடங்கியுள்ளனர். மீன் இனங்களில் மிகவும் மோசமானவை இந்த கெளுத்தி மீன் ஆகும்.

இந்த வகையான மீன்கள் ஒரே நேரத்தில் 4 லட்சம் முட்டைகள் இடக் கூடியவை. ஆனால், நம் நாட்டு கெளுத்தி மீன்கள் குறைந்தது 15,000 முட்டைகள் வரைதான் இடும். இதனால் நாளடைவில் இந்த மீன்களின் எண்ணிக்கை பல்கி பெருகி நம் நாட்டு மீன் இனங்களை முற்றிலும் அழித்துவிடும். ஏன் என்றால் இந்த மீன்கள் பிற மீன் இனங்களை உண்டு வாழக்கூடியது. தன் இனத்தை சேர்ந்த மீன்களையும் சாப்பிடும் குணம் உடையது. சாக்கடை நிறைந்த தண்ணீரிலும் காற்றை குடித்துகூட உயிர் வாழும் திறன் கொண்டது.

அதோடு மட்டுமின்றி இந்த மீன்கள் தண்ணீரில் உள்ள ஈயம், பித்தளை போன்ற உலோகங்களை அதிகளவில் சாப்பிடுகின்றன. இதனால் இந்த மீன்களை மனிதர்கள் உண்பதும் ஆபத்தானது என்கின்றனர் வல்லுநர்கள். இதன் காரணமாகத்தான் ஆப்பிரிக்க கெளுத்தி மீன்களுக்கு மத்திய, மாநில அரசுகள் தடை விதித்தது. ஆனாலும் இதனை கைவிட மறுத்த சில மீனவர்கள் இன்னும் ஆப்பிரிக்க வகையான கெளுத்தி மீன்களை வளர்ப்பதை வாடிக்கையாக வைத்துள்ளனர்.

இறைச்சி கடைகளில் இருந்து கிடைக்கும் கழிவு பொருட்களை இந்த மீன்களுக்கு உணவாக அளிக்கிறார்கள். இதனால் தோல் நோய், புற்று நோய் வரும் அபாயமும் உள்ளது. இந்நிலையில், கிருஷ்ணகிரி மாவட்டம், தென்பெண்ணை ஆற்றங்கரையோரங்களில் பல இடங்களில் ஆப்பிரிக்க கெளுத்தி மீன்கள் வளர்க்கப்படுவதாக தகவல் கிடைத்தது. இதனையடுத்து தென்பெண்ணை கரையோரப் பகுதிகளான பாகலூர், புதிநாத்தம், முத்தாலி ஆகிய இடங்களில் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.

அப்போது ஆப்பிரிக்க கெளுத்தி மீன்கள் வளர்க்கப்படுவதை கண்ட அதிகாரிகள், அதனை மண்ணுக்குள் போட்டு புதைத்தனர். மேலும், மீனவர்களுக்கு எச்சரிக்கை செய்து விட்டு சென்றனர். இது போன்ற மீன்கள் மிகவும் ஆபத்தானவை, நமது நாட்டு மீன்கள் அழிந்துவிடாமல் பாதுகாப்பது நமது ஒவ்வொருவரின் கடமையும் கூட.

Similar News