மீண்டும் தமிழகத்துக்கு அடித்த ஜாக்பாட்! ரூ7,000 கோடி முதலீடு செய்ய வரும் தைவான் நிறுவனம்!
மீண்டும் தமிழகத்துக்கு அடித்த ஜாக்பாட்! ரூ7,000 கோடி முதலீடு செய்ய வரும் தைவான் நிறுவனம்!;
ஆப்பிள் நிறுவனத்தின் மிகப்பெரிய ஒப்பந்த உற்பத்தியாளர்களில் ஒன்றான தைவான் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் பெகாட்ரான் கார்ப்பரேஷன் இந்தியாவில் தனது முதல் உற்பத்தி பிரிவை அமைப்பதற்காக தமிழகத்தை தேர்வு செய்ய வாய்ப்புள்ளது.
கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநில அரசாங்கங்களுடன் பல மாதங்களாக நடந்த பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு, பெகாட்ரான் கார்ப்பரேஷன் இறுதியாக சென்னை அருகே ஆலையை நிறுவ முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
பெகாட்ரானில் இருந்து ஒரு உயர்மட்டக் குழு நவம்பர் மாதம் கர்நாடக அரசு அதிகாரிகளைச் சந்தித்தது. அப்போது அந்த மாநிலத்தைத் தேர்வுசெய்தால் நிறுவனத்திற்கு வழங்கப்படும் வசதிகள் மற்றும் சலுகைகள் குறித்து விரிவான விளக்கக்காட்சியை வழங்கியிருந்தனர். இருப்பினும், அந்நிறுவனத்துக்கு சென்னை மூன்று துறைமுகங்களுக்கு அருகாமையில் இருப்பது சாதகமாக தெரிகிறது.
பெங்களூருக்கு வெளியே உள்ள விஸ்ட்ரான் தொழிற்சாலையில் வன்முறை நடந்த பின்னர் தைவான் நிறுவனத்திற்கு எந்த புதிய ஒப்பந்தத்தையும் வழங்கப்போவதில்லை என ஆப்பிள் நிறுவனம் கூறியது. அதனை தொடர்ந்தே அந்நிறுவனத்தின் பார்வை தமிழகத்தின் மீது திரும்பியுள்ளது.
ஃபாக்ஸ்கான் மற்றும் விஸ்ட்ரானுக்குப் பிறகு ஆப்பிள் ஐபோன்களுக்கான மூன்றாவது பெரிய ஒப்பந்த உற்பத்தியாளரான பெகாட்ரான் தமிழகத்துக்கு வர உள்ளது.
"பெகாட்ரானின் மூத்த நிர்வாகத்துடன் நாங்கள் பல சுற்று பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளோம். நிறுவனத்தின் இந்தியத் தலைவர் நவம்பர் மாதம் முதல்வர் எடப்பாடி கே பழனிசாமியை சந்தித்தார். பேச்சுவார்த்தைகள் சிறப்பாக முன்னேறி வருகின்றன, மேலும் தைவானிய நிறுவனத்திற்கு வழங்கப்படும் சலுகைகளைப் பற்றி விவாதிக்கவும் இறுதி செய்யவும் நாங்கள் மற்றொரு சுற்று பேச்சுவார்த்தை நடத்துவோம்" என அந்நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.