ஜவ்வாது மலையில் கண்டுபிடிக்கப்பட்ட சோழர் காலத்து பகவதி சிலையும், கல்வெட்டும் ! வரலாற்று ஆய்வாளர்கள் கூறுவது என்ன ?
திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள ஜமுனாமரத்தூர் தாலுகாவில் இருக்கும் புகழ்பெற்ற சிறப்புடைய ஜவ்வாதுமலையில்,சமீப காலமாக வரலாற்று ஆய்வாளர்களுக்கு கிடைத்து வரும் நடுகற்களும், கல்வெட்டுகளும் தொல்லியல் தடயங்களும் தொடர்ந்து ஜவ்வாது மலைக்கு புதிய வரலாற்றுச் செய்திகளை அளித்துவருகின்றன.
அது வரலாற்று ஆய்வாளர்களுக்கு பெரும் உதவியாக அமைந்து வருகிறது.
அந்த வகையில் ஜவ்வாதுமலையில் உள்ள கோட்டூர்கொல்லை கிராம மலைப்பகுதியில், ச.பாலமுருகன், மதன் மோகன், பழனிச்சாமி மற்றும் சிற்றிங்கூர் ராஜா ஆகிய திருவண்ணாமலை மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவத்தினைச் சேர்ந்தவர்கள் ஆய்வுசெய்தனர்.
அவர்களது தீவிர ஆய்வின் விளைவாக கொற்றவை சிலையும், சோழர் கால கல்வெட்டும் அப்பகுதியிலுள்ள சிறிய கோவிலில் கண்டுபிடிக்கப்பட்டது.
கொற்றவையும், பகவதியும் ஒன்று தான் என்பதற்குச் சான்றாக இச்ச்சிலை இருக்கலாம் :
ஜவ்வாதுமலையில் அதிகம் போக்குவரத்து இல்லாத 11-ம் நூற்றாண்டிலேயே இச்ச்சிலை வடிக்கப்பட்டிருப்பது அம்மலையின் வரலாற்று முக்கியத்துவத்தை காட்டுகிறது என்றும்,
மேலும் கொற்றவையை பகவதி என்ற பெயரிலும் வழிபடப்படுகிறது இது ஒரு சான்றாகவும் கருதலாம் என்று வரலாற்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
முதலாம் குலோத்துங்க சோழன் காலத்து கல்வெட்டு !
3 அடி உயரமும், 13 வரிகளைக் கொண்டும் அந்த கல்வெட்டு காணப்படுகிறது . அக்கல்வெட்டு 11-ம் நூற்றாண்டில் முதலாம் குலோத்துங்க சோழனின் 8-ம் ஆட்சியாண்டில் வெட்டப்பட்டிருக்கலாம் என்று அந்த வரலாற்று ஆய்வாளர்கள் யூகிக்கின்றனர், இக்கல்வெட்டில் பகவதி சிலையை செய்து அளித்துள்ள நால்வரது பெயர்கள் இடம்பெற்றுள்ளது.
நெல்வாடை மாதன் சித்திரமேழி, போடன் நக்கன், மாறன் மாதன், பன்றன் ஆகிய பெயர்கள் இந்த கல்வெட்டின் சிறப்பம்சமாக அமைகிறது.
இத்தகைய வரலாற்று ஆய்வாளர்களின் கண்டுபிடிப்புகள், தமிழகத்தின் தொன்மையையும், சனாதனத்தின் மேன்மையையும் எடுத்துரைப்பதாக அமைகிறது.
Image : ThiruvannamaniDistrict