கரூர்: சுடுகாட்டிற்கு பாதையில்லாததால் விளை நிலத்தில் இறந்தவர் உடலை எடுத்துச்செல்லும் மக்கள்!
சுடுகாட்டிற்கு பாதையில்லாததால் விளை நிலங்களில் இறந்தவரின் உடலை எடுத்துச் செல்லும் அவலம் தோகைமலை கிராம மக்களுக்கு ஏற்பட்டுள்ளது. கரூர் மாவட்டம், தோகைமலை ஊராட்சிகுட்பட்ட ஒத்தப்பட்டி என்ற கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் 50க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் எந்த ஒரு அடிப்படை வசதியும் அரசு செய்துக்கொடுக்கவில்லை என்று கிராம மக்கள் புலம்பி வருகின்றனர்.
அடிப்படை தேவைகளான சாலை வசதி, குடிநீர் வசதி, மின்சார வசதி, எரிமேடை உள்ளிட்ட எந்த ஒரு திட்டத்தையும் அரசு நிறைவேற்றவில்லை என கிராம மக்கள் கண்ணீருடன் கூறிவருகின்றனர். இது தொடர்பாக பல முறை மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என கிராம மக்கள் கடுமையாக குற்றம்சாட்டியுள்ளனர்.
இந்நிலையில், தோகைமலை கிராமத்தை சேர்ந்த ஒருவர் வயது முதிர்வு காரணமாக உயிரிழந்தார். அவரது உடலை சுடுகாட்டிற்கு எடுத்து செல்வதற்கு சாலை வசதி இல்லாததால் வயல்வெளியில் எடுத்து செல்லும் அவலம் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
Source, Image Courtesy: News 18 Tamilnadu