கோவை: ஓட்டல் ஊழியர்கள், பெண்கள் மீது தாக்குதல் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவு.!
ஓட்டலில் சாப்பிட்டுக் கொண்டிருந்த பெண்கள் மீது போலீசார் லத்தியால் தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த காட்சிகள் அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.
கோவையில் கொரோனா விதிமுறைகளை மீறி ஓட்டல் செயல்பட்டதால் ஊழியர்கள் மீது காவல்துறையினர் தாக்குதல் நடத்திய சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் சூழலில், கடந்த 10ம் தேதி முதல் புதிய கட்டுப்பாடுகளை தமிழக அரசு விதித்தது. இந்த புதிய சட்டம் கடந்த 2 நாட்களாக அமலில் உள்ளது.
அதே போன்று ஓட்டல்கள் இரவு 11 மணி வரை செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், கோவை காந்திபுரத்தில் உள்ள ஓட்டல் பத்தரை மணியளவில் வந்த காட்டூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் முத்து, கொரோனா விதிகளை மீறி கடையை திறந்து வைத்திருந்ததாக கூறி, ஊழியர்கள் மீது தாக்குதல் நடத்தினார்.
மேலும், ஓட்டலில் சாப்பிட்டுக் கொண்டிருந்த பெண்கள் மீது போலீசார் லத்தியால் தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த காட்சிகள் அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இந்த சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனையடுத்து உதவி ஆய்வாளர் முத்து காவல் கட்டுப்பாட்டு அறைக்கு இடமாற்றம் செய்யப்பட்டார்.
இது தொடர்பாக மாநில மனித உரிமை ஆணையம், 2 வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று கோவை மாநகர காவல் ஆணையருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இது பற்றி நடிகர் கமல்ஹாசனும் ட்விட் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.