கோவை: கொரோனா பாதித்த தெருவை மூடியதை கண்டித்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்.!

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாநகராட்சி நிர்வாகம் அந்த வீட்டிற்கு செல்லும் சாலையை தகர சீட்டுகளை கொண்டு அடைத்தது.

Update: 2021-05-04 11:44 GMT

கோவை நகரில் கொரோனா தொற்று பாதித்த தெருவை மாநகராட்சி அதிகாரிகள் மூடியதை கண்டித்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றின் 2வது அலை மிகவும் தீவிரம் அடைந்துள்ள நிலையில், பல இடங்களில் கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் கோவையில் தொற்று பாதித்த பகுதிகளை மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வு செய்து, மற்ற இடங்களுக்கு பரவாமல் தடுப்பதற்காக தகரத்தை வைத்து தெருக்களை மூடி வருகின்றனர்.


 



கோவை குப்புசாமி மருத்துவமனை அருகேயுள்ள பெருமாள் கோயில் வீதியில் வசிக்கும் நபருக்கு, சில நாட்களுக்கு முன்னர் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாநகராட்சி நிர்வாகம் அந்த வீட்டிற்கு செல்லும் சாலையை தகர சீட்டுகளை கொண்டு அடைத்தது.




 


இதன் காரணமாக அருகாமையில் இருக்கும் குடும்பங்கள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகினர். வாகனங்களில் வேலைக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதனால், ஆத்திரமடைந்த அந்த பகுதி இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் தடுப்புகளை அகற்றக்கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இது குறித்து அப்பகுதி மக்கள் கூறும்போது, ஒரு வீட்டில் பாதிப்பு ஏற்பட்டதால் 50 குடும்பத்தினர் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர். எனவே தாங்கள் வெளியிடங்களுக்கு செல்வதற்கு அதிகாரிகள் அனுமதிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டனர்.

Similar News