தென்னகத்து கும்பமேளா: கும்பகோணத்தில் மாசி மக திருவிழா! குளத்தில் புனித நீராடிய பக்தர்கள்!
மாசிமகத் திருவிழாவை முன்னிட்டு கும்பகோணம் மகாமக குளத்தில் நேற்று (பிப்ரவரி 17) தீர்த்தவாரி நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அதிகாலை முதலே புனித நீராடினர். இதனை தொடர்ந்து அனைத்து நீர்நிலைகளையும் பாதுகாக்கவும், நீர் நிலைகளுக்கு நன்றி தெரிவிக்கின்ற விதமாகவும் மகாமக குளத்தில் மகா ஆரத்தி நடைபெற்றது.
தமிழகத்தில் கோயில் நகரம் என்று அழைக்கப்படுகின்ற கும்பகோணம் மகாமகம் குளத்தில் ஒவ்வொரு ஆண்டும் மாசி மாதம் மக நட்சத்திரத் தினத்தில் மாசி மகப் பெருந்திருவிழா கோலாகலமாக நடைபெறும். அதே போன்று 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை இந்த விழா மகாமக என்ற விழாவாகக் கொண்டாடப்படுகிறது. இந்த விழாவை தென்னகத்து கும்பமேளா எனவும் அழைக்கின்றனர். இந்த விழாவை முன்னிட்டு இந்தியாவில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை புரிந்து புனித நீராடி விட்டுச் செல்வது வழக்கம். அதே போன்று இந்த ஆண்டு மாசிமக திருவிழா கடந்த 8ம் தேதி முதல் ஆதிகும்பேஸ்வரர், காசிவிஸ்வநாதர், அபிமுகேஸ்வரர், காளஹஸ்தீஸ்வரர், கவுதமேஸ்வரர், வியாழசோமேஸ்வரர் உள்ளிட்ட 6 சிவாலயங்களில் பத்து நாட்கள் உற்சவம் நடைபெற்றது. விழாவில் திருத்தேரோட்டம் நடைபெற்றது.
மேலும், 6 சிவன் கோயில்களில் மாசி மகத்தன்று மட்டும் ஏகதினம் உற்சவமாக கொண்டாடப்படுகிறது. இந்த விழாவின் மிக முக்கிய நிகழ்ச்சியாக நேற்று (பிப்ரவரி 17) காலை 12 சிவன் கோயில்களில் இருந்து சுவாமி அம்பாள் பஞ்சமூர்த்திகளுடன் புறப்பட்டு ரிஷப வாகனங்களில் மகாமக குளத்தின் நான்கு கரைகளிலும் எழுந்தருளினர். அங்கு 21 வகையிலான பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. அதன் பின்னர் அஸ்திரதேவர்கள் மகாமக குளத்தில் நீராடினர். புனித நீராடுவதற்காக காத்திருந்த பக்தர்கள் அனைவரும் குளத்தில் இறங்கி புனித நீராடினர். இதில் பல ஆயிரம் கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Source, Image Courtesy: Vikatan