தரமற்ற உணவு தரும் ஹக்கீம் பிரியாணி - புகார் தரக்கூடாது என மிரட்டும் 'முக்கிய' கட்சிப் பிரமுகர்.!

தரமற்ற உணவு தரும் ஹக்கீம் பிரியாணி - புகார் தரக்கூடாது என மிரட்டும் 'முக்கிய' கட்சிப் பிரமுகர்.!

Update: 2020-11-10 11:21 GMT

குறிப்பிட்ட சில உணவகங்கள், குறிப்பாக பிரியாணிக் கடைகளில் சுகாதாரம் இல்லை, தரமான முறையில் உணவு தயாரிக்கப்படுவது இல்லை என்றும் ஆட்டிறைச்சிக்கு பதிலாக மாட்டிறைச்சி, இளம் கன்றின் இறைச்சியைப் பயன்படுத்துவதாகவும் அவ்வப்போது புகார்கள் வந்தன வண்ணம் உள்ளன. எனினும் மக்களின் பிரியாணி ஆசை அடங்குவது போல் இல்லை. இதனால் தெருவுக்கு ஒரு பிரியாணிக் கடை என்று ஆகி விட்டது தமிழகத்தின் நிலை.

சிறிய, ரோட்டோரக் கடைகள் மட்டும் அல்ல, பெரிய ரெஸ்டாரண்ட் அளவிலான உணவகங்கள் கூட உணவு தயாரிப்பில் அக்கறை காட்டுவதில்லை என்பதை நிரூபிக்கும் விதமாக நடந்திருக்கிறது ஒரு சம்பவம்.

திருச்சி பா.ம.க மாவட்டச் செயலாளராக இருப்பவர் திலீப் குமார். இவர் கடந்த திங்கள் அன்று தனது குடும்பத்துடன் தீபாவளி ஷாப்பிங் சென்று விட்டு வீடு திரும்பும் முன் பிரியாணி சாப்பிடலாம் என்று அவரது மகளின் ஆசைக்கு இணங்க ஒரு‌ பிரபலமான உணவகத்துக்குச் சென்றிருக்கிறார்.
 

திருச்சி சின்னக்கடை வீதியில் வாலாஜா காம்ப்ளெக்சில் உள்ள கே.எம்.எஸ் ஹக்கீம் பிரியாணி கடை தான் அது. அங்கே பிரியாணியும் சிக்கன் லாலிபாப்பும் ஆர்டர் செய்து விட்டு ஆவலாக சாப்பிடலாம் என்று காத்திருந்தவர்களுக்கு கிடைத்ததோ அதிர்ச்சி வைத்தியம்.

சப்ளையர் கொண்டு வந்து வைத்த மட்டன் பிரியாணியில் இருந்த ஆட்டுக்கறி சரியாக சுத்தம் செய்யப்படாமல் ரோமங்களுடன் அப்படியே போட்டு சமைக்கப்பட்டு இருந்தது. இதைப் பார்த்து அருவருப்படைந்த திலீப் குமார் சப்ளையரை அழைத்து கேள்வி எழுப்பியதுடன் உணவக மேலாளரிடமும் புகார் தெரிவித்துள்ளார்.

ஆனால் அவரது புகாரைக் கண்டு கொள்ளாமல் தொடர்ந்து அதே பிரியாணியை அனைவருக்கும் பரிமாறி இருக்கின்றனர். அப்போது அங்கு 40க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் இருந்ததாகக் கூறப்படுகிறது. "இவ்வளவு சொல்லியும் நீங்கள் அக்கறையின்றி உங்கள் வேலையைப் பார்த்துக் கொண்டு இருந்தால் என்ன அர்த்தம்" என்று கேட்ட திலீப் குமாருக்கு மேலாளர் செவி சாய்க்கவில்லை.

எனவே வெறுப்பில் ரோமங்களுடன் இருந்த பிரியாணியை புகைப்படம் எடுத்துக் கொண்டு புகார் அளிக்கப் போவதாகக் கூறி விட்டு திலீப் குமார் வீட்டுக் வந்து விட்டாராம்.

அவர் புகைப்படம் எடுப்பதைப் பார்த்து விட்டு "இலவசமாக வேண்டுமானாலும் சாப்பிட்டுக் கொள்ளுங்கள். இந்த விவகாரத்தைப் பெரிது படுத்தாதீர்கள்" என்று சிலர் சொல்லிக் கொண்டிருந்த போதே, "தரமில்லாத உணவைப் பரிமாறும் உங்களைப் பற்றி உணவுப் பாதுகாப்பு துறை அதிகாரிகளிடம் புகார் அளிக்கப் போகிறேன்" என்று கூறிய திலீப் குமாரிடம், "யாரிடம் வேண்டுமானாலும் போய் சொல்லுங்கள். எங்களை ஒன்றும் செய்ய முடியாது" என்று ஒருவர் திமிராகப் பேசி இருக்கிறார்.

 அப்போதிருந்து 'முக்கிய' அரசியல் கட்சியைச் சேர்ந்த பிரமுகர் ஒருவர் தன்னை அழைத்து "புகார் கொடுக்ப் போகிறாயா" என்று மிரட்டி வருவதாக திலீப் குமார் கூறியுள்ளார். மேலும் அதிக காசு கொடுத்து வாங்கும் உணவில் தரமில்லை என்று சொன்னால் கட்சிக்காரர்கள் மிரட்டுவது என்ன நியாயம் என்ற கோபத்தில் மாவட்ட ஆட்சியரிடம் புகாரும் அளித்திருக்கிறார்.

பிரியாணிக் கடை தரப்பில் இந்த நிகழ்வு உண்மை தான் என்று ஒப்புக் கொள்வதோடு, நாள் ஒன்றுக்கு நூறு கிலோ இருநூறு கிலோ கறி வாங்கும் போது தெரியாமல் வந்து விட்டது என்று சப்பைக்கட்டு கட்டி இருக்கிறார்கள்.

கே.எம்.எஸ் ஹக்கீம் பிரியாணி உணவக்ததுக்கு திருச்சியின் பல பகுதிகளிலும் கிளைகள் உள்ளன. பிரபலமான இந்த உணவகத்தின் திருச்சி பேருந்து நிலையம் அருகே உள்ள பிளாசா டவர் கிளையின் திறப்பு விழாவில் திருச்சி வடக்கு மாவட்ட திமுக செயலாளர் காடுவெட்டி தியாகராஜன் மற்றும் முன்னாள் எம்.எல்.ஏ அன்பில் பெரியசாமி ஆகியோர் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

கடந்த அக்டோபர் 11 அன்று உலக பிரியாணி தினத்தை முன்னிட்டு ஊரடங்கு விதிகளை காற்றில் பறக்க விட்டு பத்து பைசாவுக்கு பிரியாணி தருவதாக மக்கள் கூட்டத்தைக் கூட்டியதும் இதே ஹக்கீம் பிரியாணிக் கடை தான்.

Similar News