நாளை கோலாகலமாக துவங்கும் மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரை திருவிழா!
மதுரை சித்திரை திருவிழா கொரோனா தொற்று காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக பக்தர்கள் இன்றி கோயில் உள் வளாகத்திலேயே நடைபெற்றது. இதனால் பல லட்சம் பக்தர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
இதற்கிடையில் கொரோனா வைரஸ் தொற்று முற்றிலும் குறைந்துள்ள நிலையில் இந்த ஆண்டு சித்திரை திருவிழா கட்டாயம் நடைபெறும் என கூறப்பட்டது. இதில் பக்தர்கள் கலந்து கொள்வார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டது. இதனால் பக்தர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். மேலும், கோயில் நிர்வாகம் சார்பில் சித்திரை திருவிழாவிற்கான ஏற்பாடுகளை தீவிரப்படுத்தியுள்ளது. தேர் புதுப்பித்தல் பணி, மாசி வீதிகளில் தேர் வலம் வருவதற்கான ஏற்பாடுகள் மற்றும் மின் விளக்குகள் அமைக்கும் பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் கொடியேற்றத்துடன் சித்திரை பெருவிழா நாளை (ஏப்ரல் 5) துவங்க உள்ளது. மொத்தம் 12 நாட்கள் நடைபெறுகிறது. தினந்தோறும் மீனாட்சி சுந்தரேசுவரர் சுவாமிகள் காலை, இரவு என்று இரண்டு வேளையும் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி மாசி வீதிகளில் பக்தர்கள் தரிசனத்திற்காக வலம் வரும் என்பது குறிப்பிடத்தக்கது.
Source, Image Courtesy: Maalaimalar