அனைத்து மக்களுக்கும் முன்னுதாரணமாக திகழும் மதுரை யாசகர்.. 28வது முறையாக ரூ.10 ஆயிரம் நிதி அளிப்பு.!
அனைத்து மக்களுக்கும் முன்னுதாரணமாக திகழும் மதுரை யாசகர்.. 28வது முறையாக ரூ.10 ஆயிரம் நிதி அளிப்பு.!
கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக பலரும் தங்களால் முடிந்த பண உதவிகளை அரசுக்கு அளித்து வந்தனர். அதே போன்று மதுரையில் வசிக்கும் யாசிகர் ஒருவர் 28வது முறையாக நிவாரண நிதி வழங்கி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார். தூத்துக்குடி அருகே உள்ள ஆலங்குளத்தை சேர்ந்த யாசிகர் பூல் பாண்டியன். இவர் மதுரையில் பிச்சை எடுத்து தன்னுடைய வாழ்க்கையை கழித்து வருகிறார்.
கடந்த ஆண்டு தொடங்கிய கொரோனாவால் அனைவரும் பாதிக்கப்பட்டனர். அப்போது முதன் முறையாக பூல் பாண்டி மதுரை ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்று தன்னால் முடிந்த பண உதவியை அளித்தார். அவரது செயல் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது. பிச்சை எடுத்து தன்னுடைய நாட்டு மக்களுக்காக கொடுத்தார் என்று பல பத்திரிகை, தொலைக்காட்சிகளில் அவரை பற்றிய செய்திகள் வந்த வண்ணம் இருந்தது.
இந்நிலையில், 28வது முறையாக மதுரை ஆட்சியர் அலுவலகத்தில் ரூ.10,000 நிதி வழங்கினார். இதுவரை அவர் ரூ.2.80 லட்சம் நிதி வழங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. கொரோனா ஊரடங்கு நேரத்தில் பிச்சை எடுத்த தொகையில் உணவுக்கு தேவையான பணத்தை எடுத்துக்கொண்டு, மீதமுள்ள பணத்தை கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக வழங்கி வருகிறார். அவரை பாராட்டும் விதமாக கடந்த மாதம் ஜனவரி 26ம் தேதி பூல் பாண்டியனுக்கு சான்றிதழை மாவட்ட ஆட்சியர் வழங்கி கவுரவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.