மீண்டும் சுறுசுறுப்படையும் மெரினா.. அதிகாலை முதலே படையெடுக்கும் பொதுமக்கள்.!

மீண்டும் சுறுசுறுப்படையும் மெரினா.. அதிகாலை முதலே படையெடுக்கும் பொதுமக்கள்.!

Update: 2020-12-15 07:13 GMT

கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் இறுதியில் சென்னை கடற்கரை பகுதிகளில் பொதுமக்கள் நுழைவதற்கு தடை விதிக்கப்பட்டது. குறிப்பாக உலக புகழ் பெற்ற மெரினா கடற்கரை பகுதியில் மக்கள் நுழையாத வகையில் போலீசார் தடுப்புகளை அமைத்து ரோந்து பணியில் ஈடுபட்டனர். 


இதனால் கடற்கரை பகுதிகளில் தினமும் நடைபயிற்சி மற்றும் விளையாட்டு பயிற்சிகளில் ஈடுபடுபவர்கள் சற்று சிரமத்திற்கு ஆளானார்கள். குறிப்பாக சென்னை மெரினா சர்வீஸ் சாலையில் அனுமதி இல்லை என்பதால், காமராஜர் சாலை நடைபாதையிலேயே நடைபயிற்சி மேற்கொண்டு வந்தனர்.

இந்நிலையில், கடந்த மாதம் இறுதியில் ஊரடங்கில் சில தளர்வுகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். அதில் சென்னையில் உள்ள மெரினா உள்ளிட்ட கடற்கரைகள் 14-ம் தேதி முதல் திறக்கப்படும் என்று அவர் அறிவித்திருந்தார்.

அரசு அறிவித்தபடி, 9 மாதங்களுக்கு பிறகு சென்னை மெரினா கடற்கரை நேற்று முதல் மக்கள் பயன்பாட்டுக்காக மீண்டும் திறக்கப்பட்டது. அதிகாலை முதலே மக்கள் ஆர்வத்துடன் கடற்கரைக்கு படையெடுத்தனர்.

குறிப்பாக நடைபயிற்சி மேற்கொள்வோர் மிகுந்த உற்சாகத்துடன் வந்திருந்தனர். பல மாதங்களுக்கு பிறகு கடற்கரை திறக்கப்பட்ட மகிழ்ச்சியில் உற்சாகத்துடன் நடைபோட்டனர்.

அதே போன்று விளையாட்டு பயிற்சியில் ஈடுபடுபவர்களும் உற்சாகமாக விளையாடினர். பழைய மாதிரி மெரினா கடற்கரை சுறுசுறுப்படைந்து வருகிறது. கடை வைத்தவர்களின் முகத்தில் சற்று சந்தோஷம் தென்படுகிறதை பார்க்க முடிகிறது.

Similar News