தியேட்டர்களுக்கு எச்சரிக்கை விடுத்த அமைச்சர் உதயக்குமார்.!

தியேட்டர்களுக்கு எச்சரிக்கை விடுத்த அமைச்சர் உதயக்குமார்.!

Update: 2021-01-06 17:22 GMT

கொரோனா தொற்று வழிகாட்டு நெறிமுறைகளை சரியாக பின்பற்றாத தியேட்டர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கொரோனா தொற்றால் கடந்த மார்ச் மாதம் முதல் தியேட்டர்கள் மூடப்பட்டன. இதனால் திரையரங்க உரிமையாளர்கள் கடுமையான நஷ்டத்தை எதிர்கொண்டனர். அதுமட்டுமின்ற ஏராளமான திரையரங்க ஊழியர்களும் தங்களது வாழ்வாதாரத்தை இழந்தனர். இதனைத்தொடர்ந்து திரையரங்குகளை திறக்க வேண்டும் என்பது தொடர்பான கோரிக்கை பலமுறை, செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூவுக்கு சென்றது.

இதன் பின்னர், தமிழகத்தில் நவம்பர் 10ம் தேதி முதல் 50 சதவீத இருக்கைகளுடன் திரையரங்குகளை திறக்க தமிழக அரசு அனுமதியளித்தது. ஆனால் புதுப்படங்கள் எதுவும் திரையரங்குகளில் வெளியிடப்படவில்லை. ஏற்கெனவே வெளியான பழைய படங்களே திரையரங்குகளில் திரையிடப்பட்டு வருகின்றன. சமீபத்தில் நடிகர் விஜய் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து கோரிக்கை விடுத்தார். திரையரங்குகளில் 100 சதவீதம் இருக்கைகளுக்கு அனுமதி அளிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

மேலும், திரைத்துறையை சேர்ந்த பலரும் இந்த கோரிக்கை முன்வைத்தனர். இதையடுத்து திரையரங்குகளில் 100 சதவீதம் இருக்கைக்கு தமிழக அரசு அனுமதி அளித்தது. இதற்கு திரைத்துறையினர் வரவேற்பை தெரிவித்திருந்தாலும் மருத்துவ நிபுணர்கள் கடும் எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றனர். இதனால் கண்டிப்பாக கொரோனா பரவும் அபாயம் உள்ளது என வலியுறுத்தி வருகின்றனர். 

இந்நிலையில், மதுரையில் செய்தியாளர்களிடம் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் பேசியதாவது: திரையரங்குகளில் 100 சதவீதம் இருக்கைகளுக்கு அனுமதி அளித்திருப்பது பெரும் வரவேற்பையும் முதலமைச்சருக்கு பாராட்டுகளையும் பெற்று தருகிறது. பள்ளிகள் இயங்கினால் முழு அளவு மாணவ மாணவிகள் வருகை தர வேண்டும். ஆனால் தியேட்டர்கள் அப்படியல்ல. குறிப்பிட்ட பார்வையாளர்கள் வந்தாலே போதுமானது.

மருத்துவர்கள் அறிவுரையின் அடிப்படையிலேயே தியேட்டர்கள் முழு அளவு இயங்க அனுமதி அளித்திருந்தாலும் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் தியேட்டர் உரிமையாளர் பார்வையாளர்கள் கவனமாக கையாள வேண்டும். கொரொனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கடைபிடிக்காத திரையரங்குகள் மீது மாவட்ட நிர்வாகம் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை  மூலம் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Similar News