தொடர்ந்து மலவாயில் தங்கம் கடத்தி வரும் "மர்ம" மனிதர்கள்.!
தொடர்ந்து மலவாயில் தங்கம் கடத்தி வரும் "மர்ம" மனிதர்கள்.!
உளவுத் தகவல் அடிப்படையில், சென்னை விமான நிலையத்தில் வந்திறங்கிய பயணிகளிடம் சுங்கத்துறை அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் மூலம் வந்த சென்னையைச் சேர்ந்த முகமது ஆசிப்(24), இண்டிகோ விமானத்தில் வந்த ராமநாதபுரத்தைச் சேர்ந்த முகமது ஷரிப்(39) ஆகியோரிடம் சுங்க அதிகாரிகள் தீவிர பரிசோதனை நடத்தினர்.
இதில் முகமது ஆசிப்பிடம் நடத்திய சோதனையில், 140 மற்றும் 123 கிராம் எடையில் 2 தங்கப் பசை பாக்கெட்டுகள், அவரது பேன்ட் பின் பாக்கெட்டில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டன. முன் பாக்கெட்டில் 30 கிராம் எடையில் தங்க துண்டு ஒன்றையும் வைத்திருந்தார். ஷரிப்பிடம் நடத்தப்பட்ட சோதனையில், 419 கிராம் தங்கப் பசை அவரது ஆசன வாயில் மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதிலிருந்து 359 கிராம் தங்கம் பிரித்தெடுக்கப்பட்டது. இவர்கள் இருவரிடமும் மொத்தம் 512 கிராம் அளவில் 24 கேரட் தங்கம், சுங்க சட்டத்தின் கீழ் பறிமுதல் செய்யப்பட்டது. இவற்றின் மதிப்பு ரூ.27.6 லட்சமாகும்.
இதே போல கடந்த சனிக்கிழமை அன்று துபாயில் இருந்து வந்த புதுக்கோட்டையைச் சேர்ந்த ஷாகுல் ஹமீது(33), ராமநாதபுரத்தைச் சேர்ந்த சையது அஜ்மீர் காஜா (26) மற்றும் நைனா முகமது(53), திருச்சியைச் சேர்ந்த ஜெகதீஷ் (53) ஆகியோரிடம் தீவிர சோதனை நடத்தப்பட்டது. அவர்கள் தங்கத்தை பசை வடிவில் ஆசனவாயில் மறைத்து கொண்டு வந்ததை ஒப்புக் கொண்டனர். இவர்களிடம் இருந்து 9 பொட்டலங்களில் 898 கிராம் தங்கப் பசை பறிமுதல் செய்யப்பட்டது. இவற்றிலிருந்து 800 கிராம் தங்கம் பிரித்தெடுக்கப்பட்டது. இவற்றின் மதிப்பு ரூ.43.1 லட்சமாகும்.
கடந்த 2 நாட்களில் மட்டும் சுங்கத் துறை 1.31 கிலோ தங்கத்தை பறிமுதல் செய்துள்ளது. இதன் மொத்த மதிப்பு ரூ.70.7 லட்சமாகும். இந்த கடத்தல் தொடர்பாக மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது என சென்னை சர்வதேச விமான நிலைய சுங்க ஆணையர் தெரிவித்துள்ளார்.