நீட் பாடத்திட்டம் மாநில பாடத்திட்டத்தை விட எளிதானது தான் - நீட் டாப்பர்.!

நீட் பாடத்திட்டம் மாநில பாடத்திட்டத்தை விட எளிதானது தான் - நீட் டாப்பர்.!

Update: 2020-10-19 07:16 GMT

நீட் தேர்வில் இந்திய அளவில் அரசு பள்ளி மாணவர்களில் முதலிடம் பெற்றுள்ள தேனி மாணவர் ஜீவித் குமார் NCERT புத்தகங்களை தமிழில் மொழிபெயர்த்து பதினோராம் வகுப்பில் இருந்தே அரசு பள்ளி மாணவர்களை தயார்படுத்தினால் அவர்கள் நீட் தேர்வை எளிதாக எதிர்கொள்ளலாம் என்று கூறியுள்ளார். தேனி மாவட்டம் சிலுவார்பட்டி அரசு பள்ளியில் பயின்ற ஜீவித் குமார் நீட் தேர்வில் 720 மதிப்பெண்களுக்கு 664 மதிப்பெண்கள் பெற்று இந்திய அளவில் 1823வது இடத்தை பெற்றுள்ளார்.


முதலாவது முறை நீட் தேர்வு எழுதிய போது 193 மதிப்பெண்கள் மட்டுமே இவரால் எடுக்க முடிந்த நிலையில் தற்போது 664 மதிப்பெண்கள் எடுத்து அரசு பள்ளி மாணவர்களில் இந்திய அளவில் முதல் இடம் பெற்றிருப்பது இவரது அயராத முயற்சியையே காட்டுகிறது.

பள்ளிப்படிப்பு முழுவதையுமே தமிழ் வழியிலேயே கற்ற ஜீவித் குமார் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் 600க்கு 568 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். இவரது தந்தை நாராயணமூர்த்தி ஆடு வளர்ப்பவராகவும் தாய் பரமேஸ்வரி 100 நாள் வேலைத் திட்டத்தில் பணி புரிந்தும் வருகின்றனர். ஜீவித் குமார் நீட் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்றது அவரது பெற்றோரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Picture credit: tamil samayam

நீட் தேர்வில் தேர்ச்சி அடைவதற்கு பாடத்திட்டத்தை சரியாக அணுகுவதே சிறந்த வழி என்று குறிப்பிட்ட ஜீவித் குமார் மாநில அரசின் பன்னிரண்டாம் வகுப்பு பாடத் திட்டத்தை விட நீட் தேர்வுக்கு குறைவான அளவிலேயே பாடத்திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன என்றும் பாடங்களை நன்றாக புரிந்து ஆழ்ந்து படித்தால் எளிதாக தேர்வில் வெற்றி அடையலாம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

ஜீவித் குமார் நன்றாக படிக்கும் மாணவர் என்பதால் பன்னிரண்டாம் வகுப்பு தேர்ச்சி அடைந்த பின் அரசின் 45 நாள் பயிற்சி வகுப்புகளில் அவரது பள்ளி தலைமை ஆசிரியர் சேர்த்து விட்டுள்ளார். எனினும் ஜீவித் குமார் முதல்முறை 193 மதிப்பெண்கள் மட்டுமே பெற்றுள்ளார். எனவே கேரள மாநிலம் திருச்சூரில் உள்ள ஒரு பயிற்சி மையத்தில் சேர்க்க முடிவு செய்துள்ளனர்.

பயிற்சி கட்டணம் 50 ஆயிரம் மட்டுமே என்பதால் தாங்களே நிதி திரட்டி பயிற்சி மையத்தில் சேர்க்க எண்ணிய நிலையில், தான் தமிழகத்திலேயே பயிற்சி பெற விரும்புவதாகவும் தாய்மொழியில் பாடங்களை படித்து சந்தேகம் வரும் பட்சத்தில் அருகில் இருக்கும் ஆசிரியர்களிடம் கேட்டு தெளிவு பெற விரும்புவதாகவும் ஜீவித் குமார் கூறியதால் நாமக்கலில் உள்ள ஒரு நீட் பயிற்சி மையத்தில் அவரை பயிற்சி பெற வைத்ததாக பள்ளித் தலைமை ஆசிரியர் கூறியுள்ளார். அவர் நன்றாகப் படித்ததால் பயிற்சி மையமும் கட்டணத்தில் சலுகை வழங்கியதாக கூறப்படுகிறது.

அதேபோல் பள்ளியின் முன்னாள் ஆசிரியரான அருள்முருகன் என்பவர் ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட ஆறு மாதங்களில் ஜீவித் குமாரை தன்னுடனே தங்க வைத்து பயிற்சி அளித்துள்ளார். நீட் தேர்வு அரசு பள்ளியில் பயிலும் பொருளாதார ரீதியாக பின்தங்கிய மாணவர்களுக்கு எதிராக உள்ளது என்று அரசியல் கட்சிகள் பிரச்சாரம் செய்துவரும் நிலையில் முயன்றால் முடியாதது எதுவும்இல்லை என்று ஜீவித் குமார் நிரூபித்து காட்டியுள்ளார்.

Similar News