4 ஆண்டுகளுக்கு பின்னர் நிரம்பிய நெல்லை பச்சையாறு அணை.. விவசாயிகள் மகிழ்ச்சி.!

4 ஆண்டுகளுக்கு பின்னர் நிரம்பிய நெல்லை பச்சையாறு அணை.. விவசாயிகள் மகிழ்ச்சி.!

Update: 2021-01-15 13:10 GMT

நெல்லை மாவட்டம், களக்காடு அருகே உள்ள வடக்கு பச்சையாறு அணை கடந்த 4 ஆண்டுகளுக்கு பிறகு நிரம்பியுள்ளது. இதனால் அணையின் பாதுகாப்பை கருதி 500 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக கொட்டித்தீர்த்து வரும் மழையால் ஏரிகள், குளம், அணைகள் வேகமாக நிரம்பி வருகிறது.

நெல்லையில் பெய்துவரும் தொடர் மழை காரணமாக தாமிரபரணி ஆற்றின் மீது உள்ள பாலத்தை கடந்து வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இதனால் நெல்லை- திருச்செந்தூர் இடையே போக்குவரத்து பாதிக்கப்பட்டதுடன், ஆயிரக்கணக்கான ஏக்கர் நெற்பயிர், வாழைப்பயிர்கள் சேதம் அடைந்துள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

இதுவரை இல்லாத அளவில் மாஞ்சோலை எஸ்டேட்டில் 517 மி.மீ., மழை நேற்று பெய்துள்ளது. மேற்குதொடர்ச்சி மலைப்பகுதியில் பலத்த மழை பெய்வதால் அணைகள் கிடுகிடுவென நிரம்பிவிட்டன. பாபநாசத்தில் 178 மி.மீ., மணிமுத்தாறில் 162 மி.மீ.,சேரன்மகாதேவியில் 120 மி.மீ., அம்பாசமுத்திரத்தில் 91 மி.மீ.,மழை பெய்தது.

ஏற்கனவே நிரம்பியுள்ள மணிமுத்தாறு, பாபநாசம், சேர்வலாறு, கடனா நதி, ராமநதி அணைகளில் இருந்து வெள்ளநீர் தாமிரபரணி ஆற்றில் வெளியேற்றப்பட்டு வருகிறது. ஆற்றங்கரையோரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

கரையோர மக்கள் அனைவரையும் வருவாய்த்துறை அதிகாரிகள் வெளியேற்றி பாதுகாப்பான முகாம்களில் தங்க வைத்துள்ளனர். மேலும், ஒரு சில நாட்களுக்கு மழை நீடிக்கும் என்பதால் நெல்லை மக்கள் பயத்தில் உள்ளனர். இந்த ஆண்டு பொங்கல் விழாவில் மழை பெய்து வருவது விவசாயிகள் மட்டுமின்றி பொதுமக்களையும் துன்பத்தில் ஆழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Similar News