தெற்கு அந்தமானில் புதிய புயல்.. நாகப்பட்டினத்தில் டிச.2ல் கரையை கடக்கும்.!

தெற்கு அந்தமானில் புதிய புயல்.. நாகப்பட்டினத்தில் டிச.2ல் கரையை கடக்கும்.!

Update: 2020-11-28 08:04 GMT

வங்கக் கடலில் தெற்கு அந்தமானில் வளி மண்டல காற்று சுழற்சி உருவாகியுள்ளது. இது மேலும் வலுப்பெற்று நாளை காற்றழுத்தமாக மாறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


இந்த காற்றழுத்தம் வலுப்பெறும் நிலையில் புயலாக மாறி தமிழகத்திற்கு வரும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. தற்போதுதான் நிவர் புயல் தமிழகத்தை மிரட்டி சென்றது. மீண்டும் ஒரு புதிய புயல் உருவாகலாம் என்று அறிவித்துள்ளது மக்களிடம் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.


இந்நிலையில், வட கிழக்கு திசையில் இருந்து குளிர்ந்த காற்று தொடர்ந்து வீசி வருவதால், மீண்டும் புயல் உருவாகும் சூழல் ஏற்பட்டுள்ளது. நிவர் புயல் கரையைக் கடந்த நிலையில், தமிழக கடலோரப் பகுதியில் மழை பெய்து வருகிறது. 


மேலும், தென்கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதை ஒட்டிய அந்தமான் நிகோபார் தீவு பகுதிகளில் தற்போது வளிமண்டல மேலடுக்கு சுழற்சி உருவாகியுள்ளது. இது மேலும் வலுப்பெற்று நாளை குறைந்த காற்றழுத்தமாக மாறும். இதன் காரணமாக நாளை மற்றும் நாளை மறுநாள் தெற்கு வங்கக் கடல் மற்றும் அந்தமான் கடலோரப் பகுதிகளில் சூறாவளிக் காற்று வீசும். 


பின்னர் அந்த காற்றழுத்தம் புயலாக மாறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த புயல் டிசம்பர் 2ம் தேதி நாகப்பட்டினம் அருகே கரையைக் கடக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Similar News