மத்திய அரசு துறைகளில் வேலை வாய்ப்பு நிகழ்ச்சி... கலந்து கொண்ட மத்திய அமைச்சர் எல்.முருகன்...
மத்திய அரசின் பல்வேறு துறைகளில் வேலை வாய்ப்பு பெற்றுள்ள 156 பேருக்கு பணி நியமன ஆணைகளை கோவையில் வழங்கினார் மத்திய அமைச்சர் டாக்டர். எல்.முருகன். மத்திய அரசின் பல்வேறு துறைகளில் வேலை வாய்ப்பு பெற்றுள்ள 156 பேருக்கு பணி நியமன ஆணைகளை மத்திய தகவல் ஒலிபரப்பு, மீன்வளம், பால்வளம் மற்றும் கால்நடைப் பராமரிப்புத் துறை இணையமைச்சர் அமைச்சர் டாக்டர். எல். முருகன் கோவையில் நேற்று நடைபெற்ற வேலைவாய்ப்புத் திருவிழாவில் வழங்கினார்.
கோயம்புத்தூர் மாவட்டம் குனியமுத்தூர் பகுதியில் உள்ள ஸ்ரீ கிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் 'Rozgar Mela' நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்வில் சிறப்புரையாற்றிய மத்திய இணையமைச்சர் எல்.முருகன் பேசுகையில், அரசு வேலை என்பது ஒவ்வொருவருக்குமான கனவு. 2022 ஆகஸ்ட் மாதம் ஒரு வருடத்தில் 10 லட்சம் பேருக்கு அரசு வேலை வாய்ப்பு அளிக்கப்படுமென பிரதமர் கூறினார். அதன்படி கடந்த ஆண்டு நவம்பர் மாதம் வேலைவாய்ப்புத் திருவிழா தொடங்கப்பட்டது. நாடு முழுவதும் இன்று நடைபெற்ற 8-வது வேலைவாய்ப்புத் திருவிழா உள்பட இதுவரை 8 லட்சம் பேருக்கு மத்திய அரசு வேலை வாய்ப்பை வழங்கியுள்ளது. டிஜிட்டல் இந்தியாவில் ஆதார் இணைக்கபட்டு 3 லட்சம் கோடி ரூபாயில் கட்டமைப்புகளை மத்திய அரசு உருவாக்கியுள்ளது. அது போல் வந்தே பாரத் ரயில் சேவை, சந்திராயன் போன்ற விஷயங்களில் இந்தியா வெற்றி பெற்றுள்ளது.
2047-ம் ஆண்டு பாரத தேசம் பெருமளவில் வளர்ச்சியில் இருக்கும். 2014 க்கு முன் 500 ஸ்டார்ட் அப் கம்பெனிகள் இருந்தன. தற்போது 1 லட்சம் ஸ்டார்ட் அப் கம்பெனிகள் உள்ளன. அதில் 30 வயது கீழ் உள்ள இளைஞர்கள் சி.இ.ஓ வாக உள்ளனர். நல்ல திட்டங்களை மக்கள் மத்தில் நேரடியாக கொண்டு போய் சேர்க்கும் பணி நமக்கு கிடைத்துள்ளது என அமைச்சர் முருகன் குறிப்பிட்டார். இந்த நிகழ்ச்சியில் கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Input & Image courtesy: News