பள்ளிகள் இன்று தொடங்கும் நிலையில், தொடரும் ஆசிரியர்களின் போராட்டம்!

Update: 2023-10-03 10:06 GMT

சென்னை நுங்கம்பாக்கம் டிபிஐ வளாகத்தில் மூன்று சங்கங்களை சேர்ந்த ஆசிரியர்கள் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி ஒரு வாரத்திற்கு மேலாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

சம வேலைக்கு சம ஊதியம் வழங்கிட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் இயக்கம் சார்பில் மேற்கொள்ளப்படும் உண்ணாவிரத போராட்டம் இன்று ஆறாவது நாளை எட்டி உள்ளது. மேலும் பகுதி நேர ஆசிரியர் சங்கத்தினர் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து மேற்கொள்ளப்பட்டு வரும் உண்ணாவிரத போராட்டம் ஒன்பதாவது நாளை எட்டியுள்ளது. அதோடு 2013 ஆண்டு ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களும் ஆறாவது நாள் உண்ணாவிரத போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த மூன்று சங்கத்தைச் சேர்ந்த ஆசிரியர்களும் தனது குடும்பங்களுடன் உண்ணாவிரத போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றனர், கிட்டத்தட்ட 182 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவர்களுக்கு குளுக்கோஸும் ஏற்றப்பட்டுள்ளது. இந்த நிலையில் நேற்று மாலை பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தனது இல்லத்திற்கு மூன்று சங்கத்தினர்களை அழைத்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளார். ஆனால் உடன்பாடு ஏற்படவில்லை என்றும் முதல்வர் கவனத்திற்கு கொண்டு சென்று விரைவில் தீர்வு காண்கிறேன் என்ற பதிலை தவிர வேறு பதிலை அமைச்சர் கூறவில்லை! அதனை ஏற்க முடியாது என ஆசிரியர் சங்கத்தினர் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

Source - Daily Thanthi

Similar News