ஐ.எஸ். தீவிரவாதிகளுடன் தொடர்பு: தஞ்சையில் மூன்று வீடுகளில் என்.ஐ.ஏ. அதிரடி சோதனை!
தஞ்சையில் மூன்று பேர் வீடுகளில் (என்.ஐ.ஏ.) என்று அழைக்கப்படும் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் அதிரடியான சோதனைகளை செய்தனர். அதாவது தடை செய்யப்பட்ட தீவிரவாத இயக்கங்களுடன் தொடர்பு வைத்திருப்பதாக கிடைக்கப்பட்ட தகவலின்படி இந்த சோதனையானது மேற்கொள்ளப்பட்டது என கூறப்படுகிறது.
இதில் கிலாபத் இயக்கத்தை சேர்ந்த அப்துல் காதர், ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்துடன் தொடர்ப்பு வைத்திருந்ததால் என்.ஐ.ஏ., அதிகாரிகள் கடந்த ஆண்டு கைது செய்து சிறையில் அடைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. அவரிடம் என்.ஐ.ஏ., அதிகாரிகள் தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது. அவர் கொடுத்த தகவலின் அடிப்படையில் 4 மாதங்களுக்கு முன்னர் மண்ணை பாபா என்பவரும் கைது செய்யப்பட்டு அவரிடம் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்நிலையில், மண்ணை பாபா கொடுத்த தகவலின்படி தஞ்சை கீழவாசல் பகுதியில் வசிக்கும் அப்துல் காதர், முகமது யாசின், காவேரி நகர் பகுதியை சேர்ந்த அகமது ஆகியோர் வீடுகளில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் காலை முதலே சோதனை மேற்கொண்டனர். அவர்களின் செல்போன் எண், ஆதார் உள்ளிட்டவைகளும் சோதனைக்காக எடுத்து செல்லப்பட்டுள்ளது. இந்த சோதனையை நடத்தக்கூடாது என்று இஸ்லாமியர்கள் ஒன்றுகூடி போராட்டம் நடத்தியதை தொடர்ந்து ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். விரைவில் அந்த மூன்று நபர்களும் கைது செய்யப்படலாம் என கூறப்படுகிறது. தஞ்சையில் ஒரே தெருவில் மூன்று பேரின் வீடுகளில் என்.ஐ.ஏ. சோதனை நடத்தப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Source, Image Courtesy: Puthiyathalaimurai