தேவாலயங்களில் இரவு பிரார்த்தனை.. காவல்துறை ஆணையர் புதிய கட்டுப்பாடு.!
தேவாலயங்களில் இரவு பிரார்த்தனை.. காவல்துறை ஆணையர் புதிய கட்டுப்பாடு.!
தேவாலயங்களில் இரவு நேரத்தில் வழிபாடு நடத்துவதற்கு காவல்துறையிடம் முன்கூட்டியே அனுமதி பெற வேண்டும் என்று சென்னை மாநகர காவல்துறை ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் கூறியுள்ளார். 1 கோடி மதிப்பிலான 863 செல்போன்களை மீட்டு அதனை உரியவர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது.
அந்த நிகழ்ச்சியில் பேசிய காவல்துறை ஆணையர் மகேஷ் குமார் அகர்வால்: புத்தாண்டு தினத்தையொட்டி மெரினா கடற்கரை சாலை உட்பட கடற்கரை சாலைகள் முழுவதுமாக மூடப்படும். அங்கு யாருக்கும் அனுமதி இல்லை. முன்னெச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
சென்னை காவல்துறையின் நடவடிக்கைகளுக்கு சென்னை மக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். மேலும், கிறிஸ்துமஸ் நேரத்தில் கிறிஸ்துவ தேவாலயங்களில் இரவில் வழிபாடு கூட்டம் நடத்த காவல்துறையிடம் முன்கூட்டிய அனுமதி பெற வேண்டும்.
கூட்டம் நடக்க உள்ள தேவாலயம் எங்கு இருக்கிறது? எத்தனை பேர் வருவார்கள்? என்பது தொடர்பாக காவல்துறையினர் ஆய்வு செய்த பின்னரே அனுமதி வழங்கப்படும். அனுமதி இல்லாமல் நடத்தக்கூடாது. புத்தாண்டு தின இரவு நேர கோயில்களில் பொதுமக்கள் வழிபாட்டிற்கு அனுமதிப்பது குறித்து இந்து சமய அறநிலையத்துறையிடம் ஆலோசித்துதான் முடிவு செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார்.