ஓமன் டூ கன்னியாகுமரி 9 நாள் கடல் பயணம்.. சர்வதேச விதிகளை மீறியதாக மீனவர்கள் கைது.!

ஓமன் டூ கன்னியாகுமரி 9 நாள் கடல் பயணம்.. சர்வதேச விதிகளை மீறியதாக மீனவர்கள் கைது.!

Update: 2020-12-14 17:53 GMT

ஓமன் நாட்டில் இருந்து விசைப்படகில் தமிழகத்துக்கு 8 நாட்களாக உயிரைப்பணயம் வைத்து தப்பிய மீனவர்கள் சர்வதேச விதிகளை மீறியதாக கைது செய்யப்பட்டுள்ளனர். கன்னியாகுமரி மாவட்டம், முட்டம் மற்றும் மேல முட்டம் மீனவ கிராமத்தை சேர்ந்த சகாய ததேயூஸ், ஸ்டீபன், அல்டோ, ஜோசப் எட்வின், பிரான்சிஸ், வங்காளதேசத்தை சேர்ந்த முகமது ரஜிப் உடின ஆகியோர் ஓமன் நாட்டில் மீன் பிடிக்கும் பணியில் ஈடுபட்டனர். ஓமன் நாட்டை சேர்ந்த அப்துல்லா என்பவர் இவர்களின் உரிமையாளர் ஆவார்.

இவர்கள் அனைவரும் கடந்த 8 மாதங்களாக ஓமனில் தங்கி மீன்பிடித்தொழிலில் ஈடுபட்டு வந்துள்ளனர். இவர்களுக்கு சம்பளத்தை அப்துல்லா வழங்கவில்லை என்று கூறப்படுகிறது. இவர்கள் அனைவரும் இந்திய தூதரகத்தில் முறையிட்டுள்ளனர். இதனை அறிந்த அப்துல்லா மீனவர்களை தாக்கி சித்ரவதை செய்துள்ளார்.

இதனால் அச்சமடைந்த மீனவர்கள், தமிழகத்துக்கு தப்பி வரமுடிவு செய்தனர். பாஸ்போர்ட் உரிமையாளர் அப்துல்லாவிடம் சிக்கிக் கொண்ட நிலையில், அப்துல்லாவின் படகிலேயே போதிய எரிபொருள்கள், உணவு பொருட்களை சேகரித்துக் கொண்டு தமிழகம் தப்பிவந்துள்ளனர். கடந்த 4ம் தேதி ஓமனிலிருந்து மீனவர்கள் புறப்பட்டு வரத்தொடங்கி சுமார் 9 நாட்களில் 2,800 கிலோ மீட்டர் தொலைவு உயிரைப்பணயம் வைத்து பயணித்து முட்டம் துறைமுகத்துக்கு வந்தடைந்தனர்.

மீனவர்கள் சொந்த ஊர் திரும்பியதால், உறவினர்கள் மகிழ்ச்சியடைந்து வரவேற்றனர். இதனிடையே படகு உரிமையாளர் அப்துல்லா ஓமன் நாட்டில் புகார் அளித்தார். தொடர்ந்து கடலோர காவல்படை மற்றும் கியூ பிரிவு போலீசார் மீனவர்களிடத்தில் விசாரணை நடத்தினர். இந்நிலையில், சர்வதேச விதிகளை மீறியதாகவும் உரிய ஆவணங்கள் இன்றி இந்தியாவுக்கு வந்ததாகவும் 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்து அவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இது போன்று தப்பித்து வரும் நேரத்தில் அவர்களுடன் வெளிநாட்டை சேர்ந்த பயங்கரவாதிகளும் வருவதற்கு வாய்ப்புள்ளது. எனவே மீனவர்கள் தகுந்த எச்சரிக்கையுடன் இருப்பது நன்று. நமது நாட்டுக்கு மீனவர்கள் வேடத்தில் வரும் குற்றவாளிகளை அடையாளம் கண்டுப்பிடித்து போலீசாரிடம் ஒப்படைப்பது மீனவர்களின் கடமையும் ஆகும்.

Similar News