தி.மு.க பிரமுகர் ஆக்கிரமிப்பில் இருந்த ரூ.100 கோடி மதிப்பிலான இடம் மீட்பு! 99 ஆண்டுக்கு எழுதி வாங்கிய மோசடி!
தஞ்சாவூரில் ரூ.100 கோடி மதிப்பில் திமுக பிரமுகரிடம் ஆக்கிரமிப்பில் இருந்த இடத்தை மாநகராட்சி நிர்வாகம் கையகப்படுத்தி நோட்டீஸ் ஓட்டியுள்ளது.;
தஞ்சாவூரில் திமுக பிரமுகர் ஆக்கிரமிப்பில் இருந்த ரூ.100 கோடி மதிப்பிலான இடத்தை மாநகராட்சி நிர்வாகம் கையகப்படுத்தியுள்ளது. அரசுக்கு சொந்தமான நிலத்தை கையகப்படுத்தியதுடன் முறைப்படி தெரிவிக்கப்பட்டு நோட்டீஸ் ஓட்டியுள்ளது.
தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையம் அருகே, நூறு ஆண்டுகள் பழமையான சுதர்சன சபா இயங்கி வருகிறது. இந்த சபாவில் நாடகம் மற்றும் சொற்பொழிவுகள் நடத்தப்பட்டு வந்தது. இப்படி கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வந்த, சுதர்சன சபா, இடையில் தி.மு.க பிரமுகரான ஆர்.கே. ராமநாதன் என்பவருக்கு 99 ஆண்டு காலத்திற்கு குத்தகைக்கு விடப்பட்டது.
நாளடைவில், அதனை களியாட்டம் நடைபெறும் இடமாக மாற்றிவிட்டனர். சுதர்சன சபா வளாகத்தில் மதுக்கூடம், ஹோட்டல், செல்போன் விற்பனைகடை, பேக்கரி ஆகியவை தனியாரால் கட்டப்பட்டன. அவைகள் அனைத்தும் உள்வாடகைக்கு விடப்பட்டு வந்துள்ளது. இவை எல்லாம் மாநகராட்சி அனுமதி இன்றி நடந்துள்ளது.
மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய வாடகை பாக்கியம் கட்டப்படவில்லை. இதனால் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டது. இதனையடுத்து தஞ்சாவூர் மாநகராட்சி ஆணையர் சரவணக்குமார் மேற்கொண்ட முயற்சியின் விளைவாக, மாநகராட்சிக்கு சொந்தமான 40 ஆயிரத்து 793 சதுர அடி கொண்ட இடம் மீட்கப்பட்டுள்ளது.
ஆக்கிரமிப்பாளர்களை வெளியேற்றுதல் சட்டத்தின் படி, அந்த இடத்தை மாநகராட்சி வசம் கையகப்படுத்தி தண்டோரா போட்டு நகரமைப்பு அலுவலர் ராஜசேகரன், பொறியாளர்கள் கண்ணதாசன், மகேந்திரன், மேற்கு காவல் நிலைய ஆய்வாளர் சந்திரா ஆகியோர் முன்னிலையில் அதிகாரிகள் நோட்டீஸ் ஒட்டினர்.