படுக மக்களின் குல தெய்வக் கோவிலை அறநிலையத்துறை கையகப்படுத்த எதிர்ப்பு- கொட்டும் மழையிலும் போராட்டம் !

Update: 2021-10-20 08:07 GMT

நீலகிரி படுக மக்களின் குல தெய்வக் கோவிலான பெத்துவா ஹெத்தை மனையை அறநிலையத் துறை கையகப்படுத்துவதை எதிர்த்து படுக மக்கள் கொட்டும் மழையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் கைகாரு சீமை படுக பிரிவினருக்கு சொந்தமான பெத்துவா ஹெத்தை மனை குலதெய்வ வீடு அமைந்துள்ளது. ஹெத்தையம்மன் என்ற பெயருடன் பிரசித்தி பெற்ற இந்த வழிபாட்டுத் தலத்தில் பூஜாரியை நியமிப்பது தொடர்பாக பிரச்சினை நிலவியதாகக் கூறப்படுகிறது. ஆர்.டி.ஓ தலைமையில் நடந்த சமாதானக் கூட்டத்தில் தீர்வு ஏற்படாத நிலையில், கைகாரு சீமை தலைவர் நஞ்சன் என்பவர் தன்னிச்சையாக அரசுக்கு கடிதம் எழுதி கோவிலை கையகப்படுத்த தூண்டியதாக படுக மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

இந்து அறநிலையத்துறை இந்த பிரச்சனையை காரணம் காட்டி ஹெத்தையம்மன் கோவில் என்று வழங்கப்படும் இந்த வழிபாட்டுத் தலத்தை கையகப்படுத்தியது. இதற்கு படுக மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். "சூழ்ச்சி தாரி, சமூக விரோதி நஞ்சனை தலைவர் பதவியில் இருந்து நீக்க வேண்டும்" என்று படுக இளைஞர் பேரவை கோரிக்கை விடுத்தது. பாஜக மற்றும் இந்து அமைப்புகளும் அறநிலையத்துறை கோவிலை கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்தன.

அறநிலையத் துறையின் அராஜக செயலை எதிர்த்து கோத்தகிரியில் பொதுமக்கள் உண்ணாவிரதம் இருந்தனர். பெண்கள் உட்பட, 150க்கும் மேற்பட்டோர் கொட்டும் மழையிலும் கலைந்து செல்லாமல் பஜனை பாடிக் கொண்டே உண்ணாவிரதம் இருந்தனர். அறநிலையத் துறை இந்தக் கோரிக்கைக்கு செவிசாய்க்காத நிலையில், மழையையும் பொருட்படுத்தாமல் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்

Tags:    

Similar News