பழனியில் மொட்டையடிக்கும் ஊழியர்களுக்கு 3 மாதமாக ஊக்கத்தொகை வழங்கவில்லை ! தீபாவளிக்கு புத்தாடை கூட எடுக்க முடியாத வறுமை !
பழனி முருகன் கோயிலில் கடந்த 3 மாதமாக ஊக்கத்தொகை வழங்கவில்லை என மொட்டையடிக்கும் தொழிலாளர்கள் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழகத்தின் பிரிசித்திப் பெற்ற திருக்கோயிலான பழனி முருகன் கோயிலில், மொட்டையடிக்கும் தொழிலாளர்களுக்கு கடந்த 3 மாதமாக ஊக்கத்தொகை வழங்காததால் நவம்பர் 5 அன்று கருப்பு பட்ச் அணிந்து பணிக்கு வந்தனர். இந்த நூதன ஆர்ப்பாட்டம் அனைவரது கவனத்தையும் பெற்றது.
"கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாகவே மொட்டையடிக்கும் பக்தர்களிடம் கோவில் நிர்வாகம் வசூலிக்கும் கட்டணத்திலிருந்து பங்குத் தொகை எங்களுக்கு வழங்கப்பட்டு வந்தது.ஆனால் கோவில்களில் கட்டணமில்லாமல் மொட்டை அடிக்கப்படும் என அறிவித்ததை தொடர்ந்து, மாதம்தோறும் 5ஆயிரம் ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்படும் என்றும், அத்துடன் திருக்கோவில் நிர்வாகம் சார்பில் ஊதியமும் வழங்கப்படும் என்று தெரிவித்தது. ஆனால் கொரோனா காரணமாக பக்தர்களுக்கு அனுமதியில்லாததால் ஊதியம் இல்லாமல் சிரமப்பட்டு வந்த தங்களுக்கு அரசு அறிவித்த ஊக்கத்தொகை எங்களுக்கு உதவும் என்று எதிர்பார்த்த நிலையில் 3 மாதங்களாகியும் ஒருமுறை கூட ஊக்கத்தொகை வழங்கவில்லை." என்று வருத்தத்துடன் மொட்டையடிக்கும் ஊழியர்கள் தங்கள் குமுறல்களை முன் வைத்தனர்.
மேலும் அவர்கள் கூறுகையில் "இந்நிலையில் 50 ஆண்டுகளுக்கு மேலாக வழங்கப்பட்டு வந்த தீபாவளி போனஸ்சும் இந்த ஆண்டு நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் எங்கள் குழந்தைகளுக்கு தீபாவளிக்கு புத்தாடை கூட எடுக்க முடியாத அளவு வறுமையில் உள்ளதாக கவலை தெரிவித்தனர்.அதனால் 330 மொட்டை அடிக்கும் தொழிலாளர்கள் தங்களது கண்டனத்தையும், கோரிக்கைகளையும் வலியுறுத்தி பேட்ஜ் அணிந்து நவம்பர் 5 அன்று பணிபுரிந்து வந்தனர்."