கோவை சி.எஸ்.ஐ திருச்சபையில் நிதி முறைகேடு! மக்கள் போராட்டம்!

நிதி முறைகேடு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டும் திருச்சபையை இரண்டாகப் பிரிப்பதை எதிர்த்து கோவை சி.எஸ்.ஐ திருச்சபை பங்கு மக்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர்

Update: 2021-01-29 10:02 GMT

கோடிக்கணக்கில் சொத்து மதிப்புள்ள தென்னிந்திய திருச்சபையில்(CSI) முறைகேடுகள் நடந்தது கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் தற்போது சி.எஸ்.ஐ கோயம்புத்தூர் திருச்சபையை இரண்டாகப் பிரிப்பதை எதிர்த்து சேலம் மற்றும் திருப்பூர் மாவட்டங்களைச் சேர்ந்த பாதிரியார்கள் தலைமையில் 50 பேர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கிழக்கே நீலகிரியில் இருந்து மேற்கே கிருஷ்ணகிரி வரை கோயம்புத்தூர் திருச்சபை சி.எஸ்.ஐ சர்ச்சுகளை நிர்வகித்து வருகிறது. சி.எஸ்.ஐ அறக்கட்டளை நிர்வாக கூட்டமைப்பின் இயக்குநர்கள் மற்றும் உறுப்பினர்கள் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டதாகக் கூறி தேசிய கம்பெனிகள் சட்ட தீர்ப்பாயம் அனைவரையும் நீக்கி உத்தரவிட்டது. மேலும் அறக்கட்டளை நிர்வாகம் குறித்து விசாரிக்கவும் உத்தரவிட்டுள்ளது.

எனவே இவற்றைச் சுட்டிக் காட்டி இந்த சமயத்தில் சட்டப்படி யாரும் திருச்சபையைப் பிரிக்க முடியாது என்று போராட்டம் செய்பவர்கள் கூறுகின்றனர். கோவை திருச்சபை செயல்பாடுகளை விசாரிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

 

மேலும் திருச்சபை பணியாளர்களின் ஊதியத்தில் இருந்து பிடித்தம் செய்த போதும் ₹3 கோடி அளவிலான பி.எப் பணத்தை திருச்சபை நிர்வாகம் இன்னும் கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனை எதிர்த்தும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நிர்வாகக் குழு என்ற ஒன்று செயல்பாட்டில் இல்லாத போது திருச்சபையை இரண்டாகப் பிரிப்பதன் நோக்கம் குறித்து கேட்பதற்காக போராட்டக்காரர்கள் ஆயரை சந்திக்க முயன்றதாக கூறப்படுகிறது.

கம்பெனிகள் சட்டத்தின் கீழ் லாபம் இல்லாத நிறுவனம்(NPC) என்று பதிவு செய்து தான் சி.எஸ்.ஐ அறக்கட்டளை இயங்கி வருகிறது. இதனால் ஆண்டுக்கு ₹2000 கோடி ரூபாய் வரை வருமான வரி விலக்கு கிடைப்பதாகக் கூறப்படுகிறது. தென்னிந்தியாவில் 5000க்கும் மேற்பட்ட கல்வி நிறுவனங்களை நடத்துவதுடன்‌ சி.எஸ்.ஐ அறக்கட்டளைக்கு கோடிக்கணக்கான சொத்துக்கள் உள்ளன.

இந்த சொத்துக்களின் மதிப்பு ₹1 லட்சம் கோடி ரூபாய்‌ வரை இருக்கக் கூடும் என்றும் நன்கொடை என்று மட்டும் வருடத்துக்கு ₹1000 கோடி நிதி பெறுவதாகக் கூறப்படுகிறது. இவ்வளவு பணத்தைக் கையாளுவதில் முறைகேடுகள் தென்பட்ட போது அது பற்றி கேள்விகள் எழுந்திருக்கின்றன. இதையடுத்து நிர்வாகிகளுக்கு இடையே பிரச்சினை எழவே தீர்ப்பாயம் நிர்வாகக் குழுவையும்‌ அதன் உறுப்பினர்களையும் நீக்கி உத்தரவிட்டது.

 

2016ஆம் ஆண்டு கம்பெனி பதிவாளர் ஆய்வு செய்ததன் அடிப்படையில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கை மூலம் சி.எஸ்.ஐ அறக்கட்டளையின் செயல்பாடுகளில் விதி மீறல்கள் இருப்பது தெரிய வந்தது.

மத்திய அரசின் அனுமதி இன்றி சட்ட விதிமுறைகளை மீறி சி.எஸ்.ஐ அறக்கட்டளை நிர்வாகம் சில முடிவுகளை எடுத்ததாகவும், கன்னியாகுமரி மற்றும் கோவை மாவட்ட திருச்சபைகளில் பணியாற்றிய ஆயர்கள் உட்பட பலர் நிதியில் கையாடல் செய்தது, சொத்துக்களை முறைகேடாக விற்றது என்று குற்றப் பின்னணி இருந்தும் அறக்கட்டளை நிர்வாகிகளாக தொடர்ந்து பணியாற்றி வந்ததும் தெரிய வந்தது.

எனவே நிர்வாகக் குழு கலைக்கப்பட்ட நிலையில், அதிகாரத்தில் யாரும் இல்லாத போது எதன் அடிப்படையில் திருச்சபை பிரிக்கப்படுகிறது என்ற கேள்வி எழுந்துள்ளது. வேறு புதிய குழுவும் அமைக்கப்படவில்லை என்பதற்கு ஆதாரமாக போராட்டக்காரர்கள் மத்திய வர்த்தகத் துறை அமைச்சகத்திடம் இருந்து தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் பெற்ற தகவல்களைக் காட்டுகிறார்கள்.

இந்த பிரிவினை சட்ட விரோதமானது என்கிறார்கள். எனவே ஆயரைச் சந்திக்க வேண்டும் என்று அவர்கள் கோரிய நிலையில் அவர் கேரளாவுக்கு சென்று விட்டதாக உதவியாளர் கூறியுள்ளார். ஆனால் அவரது காரும் அதன் ஓட்டுநரும் திருச்சபை அலுவலகத்தில் தான் இருந்துள்ளனர். சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கில் இன்னும் சில நாட்களில் தீர்ப்பு வரவிருக்கும் நிலையில் அதன் மூலமாவது இந்தப் பிரச்சினைக்கு விடிவு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் இருக்கின்றனர் போராடும் கிறிஸ்தவர்கள்.

With inputs from Swarajya

Similar News