பற்றி எரிந்த பிள்ளையார் கோவில் அரசமரம் - மதுரையில் பரபரப்பு.!

பற்றி எரிந்த பிள்ளையார் கோவில் அரசமரம் - மதுரையில் பரபரப்பு.!

Update: 2020-11-25 16:37 GMT

மதுரையில் நூற்றாண்டு பழமையான பிள்ளையார் கோவிலில் உள்ள அரசமரம் தீ பற்றி எரிந்தது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சமூக விரோதிகள் எவரேனும் நாச வேலையில் ஈடுபடுவதற்காக தீப்பற்ற வைத்தனரா அல்லது பக்தர்கள் ஏற்றிய தீபத்தால் விபத்து ஏற்பட்டதா என்பது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மதுரையில் தல்லாகுளம் பகுதியில் நூற்றாண்டு பழமையான அரச மரம் உள்ளது. இந்த அரச மரத்திற்கு கீழ் ஒரு சிறிய பிள்ளையார் சிலையை வைத்து மக்கள் வழிபட்டு வந்தனர். இந்நிலையில் இந்த அரசமரத்தின் ஒரு பகுதியில் நேற்று திடீரென்று தீப்பிடித்து எரியத் தொடங்கியது. இதனைக் கண்ட பக்தர்கள் அதிர்ச்சி அடைந்து தீயணைப்புத் துறைக்கு தகவல் கொடுத்தனர்.

விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் தீ மேலும் பரவாமல் அணைத்தனர். இந்த நூற்றாண்டு பழமையான அரச மரத்தின் ஒரு பகுதி காய்ந்து இருந்ததால் தீ வேகமாக பரவியதாகவும் இதனை கட்டுப்படுத்துவதற்காக அந்த காய்ந்த பகுதி ஜே.சி.பி இயந்திரம் மூலம் அகற்றபட்டதாகவும் தீயணைப்புத் துறையினர் தெரிவித்துள்ளனர்.

முதற்கட்ட விசாரணையில் கோவிலுக்கு வந்த பக்தர்கள் ஏற்றிய தீபம் காரணமாக தீ பற்றி இருக்கலாம் என்று தீயணைப்பு துறையினர் தெரிவித்தனர். ஆனால் அப்பகுதி மக்களோ சமூக விரோதிகள் எவரேனும் இந்த மரத்திற்கு தீ வைத்து விட்டு அங்கிருந்து தப்பி சென்றிருக்கலாம் என்று சந்தேகம் அடைந்துள்ளனர். நூற்றாண்டு பழமையான பிள்ளையார் கோவில் அரச மரம் பற்றி எரிந்த சம்பவம் தல்லாகுளம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


 

Similar News