தமிழ்நாடு அரசும், போலீசும் கொரோனாவை கட்டுப்படுத்தர மாதிரி தெரியல: துணை ராணுவத்தை அழைக்கும் டாக்டர் ராமதாஸ்.!
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றின் 2வது அலையால் பல லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதே போன்று இறப்பவர்களின் எண்ணிக்கையும் பல மடங்கு உயர்ந்து கொண்டே செல்கிறது. ஊரடங்கு அமல்படுத்தியபோதும் தொற்று எண்ணிக்கை குறைந்த பாடில்லை.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றின் 2வது அலையால் பல லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதே போன்று இறப்பவர்களின் எண்ணிக்கையும் பல மடங்கு உயர்ந்து கொண்டே செல்கிறது. ஊரடங்கு அமல்படுத்தியபோதும் தொற்று எண்ணிக்கை குறைந்த பாடில்லை.
இந்நிலையில், பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்: தமிழ்நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை ஓரளவு குறைந்தாலும், உயிரிழப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் அது குறித்த எந்த கவலையும், பொறுப்பும் இல்லாமல் சாலைகளில் வாகனங்களில் வலம் வருவோரின் எண்ணிக்கை மீண்டும் அதிகரித்திருப்பது மிகவும் அச்சமளிக்கிறது. ஒரு சில நகரங்களைத் தவிர மற்ற நகரங்களில் ஊரடங்கு கட்டுப்பாடுகளை மீறி ஊர் சுற்றுவோரை கட்டுப்படுத்த அரசும் காவல்துறையும் நடவடிக்கை எடுக்காதது கண்டிக்கத்தக்கது.
தமிழ்நாட்டில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக கடந்த 10&ஆம் தேதி முதல் முழு ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால், அதற்கான எந்த அறிகுறியும் இல்லாமல் சென்னை தொடங்கி கன்னியாகுமரி வரை அனைத்து ஊர்களிலும் பொதுமக்கள் கட்டுப்பாடின்றி வலம் வந்ததை தொடர்ந்து சுட்டிக்காட்டியதுடன், ஊரடங்கை கடுமையாக செயல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தினேன். அதைத் தொடர்ந்து கடந்த 13&ஆம் தேதி நடைபெற்ற சட்டப்பேரவை அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி 14&ஆம் தேதி முதல் ஊரடங்கு தீவிரமாக்கப்பட்டது. அதன் காரணமாக கடந்த 3 நாட்கள் மட்டும் சாலைகளில் வாகனப் போக்குவரத்து கட்டுப்படுத்தப்பட்டிருந்த நிலையில், இன்று முதல் மீண்டும் அனைத்து சாலைகளிலும் மக்கள் கட்டுப்பாடின்றி வலம் வரத் தொடங்கி விட்டனர். இது ஆபத்தானது.
சென்னை அண்ணா சாலையில் இன்று போக்குவரத்து நெரிசல் ஏற்படும் அளவுக்கு வாகனங்கள் குவிந்தன. காவல்துறையினர் ஆங்காங்கே தடுப்புகளை அமைத்து, வாகனத் தணிக்கை மேற்கொண்டு, தேவையானவர்களை மட்டும் தொடர்ந்து பயணம் செய்ய அனுமதித்தனர். ஆனால், அதையும் கடந்து சென்னையின் பெரும்பான்மையான சாலைகளில் அதிக அளவில் வாகன நடமாட்டத்தை காண முடிந்தது.
சென்னையிலாவது தேவையின்றி சுற்றித் திரியும் வாகனங்களை தடுத்து நிறுத்தவும், கட்டுப்படுத்தவும் காவல்துறையினர் நடவடிக்கை எடுத்தனர். ஆனால், தமிழகத்தின் மற்ற நகரங்களில் அத்தகைய தடுப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை. குறிப்பாக கடலூர், திருப்பூர், திருச்சி உள்ளிட்ட நகரங்களில் திருவிழா போன்று சாலைகளில் இரு சக்கர ஊர்திகளிலும், மகிழுந்துகளிலும் வலம் வருகின்றனர். அவர்களை கட்டுப்படுத்துவதற்கு எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. இதே நிலை இன்னும் சில நாட்கள் நீடித்தால் தமிழகத்தின் சாலைகளே கொரோனா தொற்று மையங்களாக மாறி விடக்கூடும். இதை மக்கள் தான் உணரவில்லை என்றால், அரசும், காவல்துறையும் கூட உணராதது அதிர்ச்சியளிக்கிறது.