ரூ.12,400 கோடி மதிப்பிலான புதிய திட்டங்கள் தொடங்கி வைக்க இன்று கோவை வருகிறார் பிரதமர் மோடி.!

ரூ.12,400 கோடி மதிப்பிலான புதிய திட்டங்கள் தொடங்கி வைக்க இன்று கோவை வருகிறார் பிரதமர் மோடி.!

Update: 2021-02-25 07:44 GMT

தமிழகத்தில் ரூ.12,400 கோடி மதிப்பிலான புதிய திட்டங்களை தொடங்கி வைக்கவும், பாஜக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்காகவும் பிரதமர் மோடி இன்று மாலை கோவை வருகிறார். இந்த பொதுக்கூட்டம் கொடிசியா மைதானத்தில் நடைபெறுகிறது. 

தமிழகத்தில் விரைவில் சட்டப்பேரவை பொதுத்தேர்தல் நடைபெறுகிறது. இதனால் அதிமுக, திமுக கட்சிகள் தேர்தல் பிரச்சாரத்தை ஏற்கெனவே ஆரம்பித்து விட்டது. அதே போன்று பாஜகவும் தேர்தல் பணிகளை துவக்கி விட்டது. மத்திய உள்துறை அமைச்சர்கள் அமித்ஷா, பாதுகாப்புத்துறை ராஜ்நாத்சிங் உள்ளிட்டோர் தமிழகத்தில் பாஜக பொதுக்கூட்டங்களில் கலந்து கொண்டுள்ளனர். அந்த வகையில் தற்போது பிரதமர் மோடியும் இன்று மாலை கோவையில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று உரையாற்ற உள்ளார்.

இந்நிலையில் தமிழகத்தில் பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைக்கவும், தேர்தல் பிரசாரத்தை தொடங்கவும் பிரதமர் மோடி இன்று கோவை வருகிறார். இதற்காக காலை 7.45 மணிக்கு தனி விமானம் மூலம் புறப்படும் மோடி, காலை 10.25 மணிக்கு சென்னை வந்து அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் புதுச்சேரி மாநிலத்திற்கு செல்கிறார்.

இதனிடையே புதுச்சேரியில் நிகழ்ச்சிகளை முடித்துவிட்டு பகல் 2.10 மணிக்கு சென்னை வருகிறார். அங்கிருந்து மீண்டும் தனி விமானம் மூலம் மாலை 3.35 மணிக்கு கோவைக்கு பிரதமர் மோடி செல்கிறார். அங்கு அவருக்கு பாஜக சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்படுகிறது. இதன் பின்னர் விமான நிலையத்தில் இருந்து கார் மூலம் கொடிசியா மைதானத்திற்கு செல்கிறார். அங்கு பிரதமர் கலந்துகொள்ளும் திட்ட தொடக்க நிகழ்ச்சிக்காக சிறப்பான அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது. அங்கு ரூ.12,400 கோடி மதிப்பிலான உள்கட்டமைப்பு திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணித்து அடிக்கல் நாட்டுகிறார். 

இந்நிகழ்ச்சியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், மற்றும் அமைச்சர்கள் கலந்து கொள்கின்றனர். எஸ்.பி.வேலுமணி உள்பட பலர் கலந்துகொள்கிறார்கள். இந்த நிகழ்ச்சிகள் முடிந்த பின்னர் மாலை 5 மணிக்கு கொடிசியா மைதானத்தில் பாஜக சார்பில் அமைக்கப்பட்ட பொதுக்கூட்டத்தில் உரையாற்றுகிறார்.

Similar News