ஆக்கிரமிப்பட்ட கோவில் சொத்துக்கள் மீட்கப்படும் - ரஜினியின் அதிரடி ஆன்மீக அரசியல்.!

ஆக்கிரமிப்பட்ட கோவில் சொத்துக்கள் மீட்கப்படும் - ரஜினியின் அதிரடி ஆன்மீக அரசியல்.!

Update: 2020-12-15 06:30 GMT

ரஜினிகாந்த் கட்சி தொடங்குவது தொடர்பான பல்வேறு தகவல்கள் வந்துகொண்டிருக்கும் நிலையில் தற்போது அவருடைய தேர்தல் அறிக்கையில் கோவில் மற்றும் வழிபாட்டு தலங்களில் செய்யப்பட்டுள்ள ஆக்கிரமிப்புகள் முற்றிலுமாக அகற்றப்படும், இந்து அறநிலையத் துறையை மாற்றி அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்ற தேர்தல் வாக்குறுதிகள் சேரக்கப்பட்டு இருப்பதாக வெளியான தகவல் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

அரசியலுக்கு வருவதாக ரஜினி முன்னரே தெரிவித்த போதும் அவர் எப்போது அரசியல் கட்சியைத் தொடங்குவார் என்பதில் குழப்பம் நிலவி வந்தது. தற்போது ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்குவது உறுதியான நிலையில் அவருடைய ஆன்மீக அரசியல் கொள்கை எப்படி இருக்கும் என்று அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

இந்நிலையில் ரஜினிகாந்த் தொடங்க இருக்கும் கட்சியின் தேர்தல் அறிக்கையில் வரவிருக்கும் விஷயங்கள் வெளியாகி உள்ளன. அதில் கோவில்கள் மற்றும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள கோவில் நிலங்கள் மீட்கப்படும் என்றும் இந்து அறநிலையத்துறை மாற்றி அமைக்கப்படும் அல்லது கலைக்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. 

 

 

இது எந்த அளவுக்கு உண்மை என்று தெரியாத நிலையில் இது உண்மையாகும் பட்சத்தில் மக்களிடம் பெரும் வரவேற்பை பெறும் என்று பொதுமக்கள் கருத்து தெரிவித்துள்ளனர். ஏற்கனவே தமிழ்நாட்டில் சிலைக்கடத்தல், கோவில் நிலங்கள் ஆக்கிரமித்தல், நகைகள் களவு போதல் போன்ற செயல்களில் பல்வேறு அரசியல் பிரமுகர்கள் மற்றும் பிற மதத்தவர்கள் ஈடுபட்டு வரும் நிலையில் தற்போது இதுபோன்ற அறிவிப்பு இந்து மக்களிடமும் சமூக ஆர்வலர்களிடமும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

இரு முக்கிய திராவிடக் கட்சிகளுமே கோவில் நிலங்களை ஆக்கிரமித்து வீடு, கடை கட்டி இருப்பவர்களை வெளியேற்றுவதை விட்டு விட்டு ஓட்டுக்காக அவர்களுக்கு பட்டா வழங்க முயற்சித்து வருகின்றன. அண்மையில் ம.தி.மு.க தலைவர் வைகோ மற்றும் தி.மு.கவினர் இணைந்து திருநெல்வேலி மாவட்டத்தில் திம்மராஜபுரம் கோவில் நிலத்தை ஆக்கிரமித்துள்ளவர்களுக்கு பட்டா வழங்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரைக் கடிதம் அளித்தது குறிப்பிடத்தக்கது.

கோவில் சொத்துக்களைப் பாதுகாக்க எந்த நடவடிக்கையும் எடுக்காத அறநிலையத் துறையின் செயல்பாடுகளும் சமீப காலமாக இந்து மக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளன. இந்நிலையில் இந்த மாத இறுதியில் தனது கட்சியின் பெயரை அறிவிக்கப் போவதாக தெரிவித்திருந்த ரஜினி தேர்தல் பணிகளை விரைவில் தொடங்குவார் என்றும் மேற்குறிப்பிட்ட விஷயங்களை தேர்தல் அறிக்கையில் சேர்ப்பார் என்றும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.

Similar News