ஆன்மீக தலமான ராமேஸ்வரத்தில் மிளகாய் பொடியுடன் சுற்றும் கடத்தல் கும்பல்: கண்டுகொள்ளுமா காவல்துறை!
ராமேஸ்வரத்தில் டாட்டூ கடை உரிமையாளர் ஒருவர் மீது மிளகாய் பொடியை தூவி காரில் கடத்திசென்று பணம் கேட்டு மிரட்டியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ராமேஸ்வரத்தில் டாட்டூ கடை உரிமையாளர் ஒருவர் மீது மிளகாய் பொடியை தூவி காரில் கடத்திசென்று பணம் கேட்டு மிரட்டியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவில் மிகவும் புனிதமான தலமாக ராமேஸ்வரம் உள்ளது. இங்கு மற்ற மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை புரிவது வழக்கம். தற்போது ஆன்மீக தலத்திற்கு வருவதற்கு பயப்படும்படியான சம்பவங்கள் நடைபெற்று வருவது பக்தர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது ராமேஸ்வரம் அருகே உள்ள தங்கச்சி மடத்தில் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாம் நினைவிடம் உள்ளது. அங்கு லெபனோன் என்பவர் டாட்டூ கடை வைத்து நடத்தி வருகின்றார். இதனிடையே கடந்த 3ம் தேதி இரவு 7 மணியளவில் இவரது கடைக்கு கஞ்சா போதையில் 3 பேர் வந்து தங்களுக்கு சிவன் படம் பச்சை குத்த வேண்டும் என்று கேட்டதாக கூறப்படுகிறது.
அதன்படி இரவு 10 மணியளவில் ஒருவருக்கு மட்டும் பச்சை குத்தி முடித்துள்ளார் லெபனோன். அப்போது மற்ற இரண்டு பேரில் ஒருவர் மிளகாய் தூளை எடுத்து லெபனோனின் முகத்தில் வீசியுள்ளார். அப்போது மூன்று பேரும் சேர்ந்து அவரை தூக்கி காரில் கடத்தி சென்றுள்ளனர். அப்போது காரில் லெபனோனை கடுமையாக அந்த கும்பல் தாக்கியுள்ளது.
லெபனோன் குடும்பத்தாருக்கு போன் செய்து ரூ.10 லட்சம் பணம் கேட்டு மிரட்டியுள்ளனர். அது மட்டுமின்றி லெபனோனிடம் கூகுள் பே மூலமாக 20 ஆயிரத்தை தங்களது போனுக்கு கடத்தல் கும்பல் மாற்றியுள்ளது. இதன் பின்னர் கடத்தல் கும்பலில் ஒருவன் போனை டாட்டு குத்தும் கடையிலேயே மறந்து வைத்துள்ளார். இதனால் வேறு வழியின்றி கடத்தல் கும்பல் மீண்டும் டாட்டு கடைக்கு காரை திருப்பியுள்ளது. அப்போது மது போதை தெளிந்ததால் கடத்தல் கும்பல் மீண்டும் டாஸ்மாக்கில் மது வாங்க காரை நிறுத்தியுள்ளனர்.
இதனை தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்ட லெபனான் காரில் இருந்து கண்ணாடியை உடைத்து தப்பியுள்ளார். நடந்த சம்பவம் பற்றி அருகாமையில் இருந்தவர்களிடம் கூறியுள்ளார். இந்த கடத்தல் கும்பலில் ஒருவரை போலீசார் கைது செய்திருப்பதாகவும் மற்ற இரண்டு பேர் இன்னும் தலைமறைவாக இருப்பதாக கூறப்படுகிறது. ஆன்மிக தலத்தில் இப்படி மிளகாய் பொடி தூவி கடத்தலில் ஈடுபடுவது மற்ற பக்தர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளை சேர்ந்த பலரும் ராமேஸ்வரத்திற்கு வருகை புரிகின்றனர். எனவே போலீசார் இது போன்ற கும்பலை விட்டுவைக்காமல் உடனடியாக கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
Source: Polimer
Image Courtesy: AstroVed