கை மாறிய 1.2 கோடி ரூபாய்.. ரியல் எஸ்டேட் அதிபர் மர்மச் சாவு - வேலூர் வி.சி.க நிர்வாகி மீது புகார்!

Update: 2022-06-22 00:29 GMT

புதுச்சேரி, லாஸ்பேட்டையை சேர்ந்த சரவணன் ரியல் எஸ்டேட் தொழில் நடத்திவந்தார். கடந்த ஆண்டு வேலூர் மாவட்டம், காட்பாடி பிரம்மபுரம் பகுதியில் 16 ஏக்கர் நிலம் வாங்க வந்திருக்கிறார். மொத்தமாக வாங்காமல் ஒரு ஏக்கர், 50 சென்ட் எனக் கொஞ்சம் கொஞ்சமாக வாங்கியதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், வேலூர் விருதம்பட்டைச் சேர்ந்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாநில அமைப்புச் செயலாளர் நீல சந்திரகுமார், சரவணனுக்கு அறிமுகமாகியிருக்கிறார். 

சரவணன் வாங்கிய நிலத்துக்குப் பின்னாலிருக்கும் இடத்தையும் வாங்கித் தருவதாக நீல சந்திரகுமார் கூறியிருக்கிறார். அதை நம்பி சரவணனும் நிலத்தை வாங்குவதற்காக 1.2 கோடி ரூபாயைத் தன் டிரைவரிடம் கொடுத்து கை மாற்றியதாகக் கூறப்படுகிறது. அப்போது பணம் கொடுக்கல் வாங்கலில் விரோதம் உண்டானது. 

ஜூன் 18-ம் தேதி, பஞ்சாயத்து பேசுவதற்காக சரவணனை நேரில் வருமாறு நீல சந்திரகுமார் போனில் அழைத்திருக்கிறார். அதன் பிறகுதான் ரியல் எஸ்டேட் அதிபர் சரவணன் வேலூர் டால்பின் டவர் கட்டடத்தின் பின்பக்கம் சடலமாக இறந்துகிடந்தார்.

அவரின் வாயிலும் மூக்கிலும் ரத்தம் வந்திருந்ததால் மரணத்தில் சந்தேகம் ஏற்பட்டிருக்கிறது. நான்கைந்து மணி நேரம் கழித்த பின்னரே அவரின் சடலத்தை அங்கிருப்பவர்கள் பார்த்திருக்கிறார்கள். தகவலறிந்து வந்த விருதம்பட்டு போலீஸார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நிர்வாகி நீல சந்திரகுமார் உட்பட நான்கு பேர் மீது சந்தேகம் இருக்கிறது என சரவணனின் உறவினர் புகார் கொடுத்திருக்கிறார்.

Input From: Vikadan 

Similar News