கனமழை: 8 மாவட்டங்களில் விடுக்கப்பட்ட 'ரெட் அலார்ட்' எச்சரிக்கை வாபஸ்!

தமிழகத்தில் கடந்த மாதம் அக்டோபர் 25ம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கியது. அன்று முதல் தற்போது வரை மாநிலத்தில் பல மாவட்டங்களில் கன மழை பெய்து வருகிறது.

Update: 2021-11-12 03:20 GMT

தமிழகத்தில் கடந்த மாதம் அக்டோபர் 25ம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கியது. அன்று முதல் தற்போது வரை மாநிலத்தில் பல மாவட்டங்களில் கன மழை பெய்து வருகிறது. அந்த வகையில் வடகிழக்கு பருவமழை தொடங்கிய கடந்த அக்டோபர் மாதத்தில் மட்டும் 22 செ.மீ. மழை தமிழகத்தில் பதிவாகியுள்ளது. அதனையடுத்து நவம்பர் மாதம் தொடங்கிய பருவமழை தமிழகம் முழுவதும் கனமழை பெய்ய தொடங்கியது. அதே போன்று சென்னையில் கடந்த 6ம் தேதி நள்ளிரவு முதல் 7ம் தேதி காலை வரை சென்னையில் 23 செ.மீ. மழை பெய்திருந்தது. அதே போன்று டெல்டா மாவட்டங்களிலும் கனமழை பெய்தது.

இதனிடையே கடந்த 9ம் தேதி தென்கிழக்கு வங்க கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவானது. இதனால் கடந்த 2 நாட்களாக நல்ல கனமழை பெய்து வருகிறது. டெல்டா மாவட்டங்களான நாகை, வேதாரண்யம், தலைஞாயிறு, மற்றும் திருத்துறைப்பூண்டி உள்ளிட்ட பகுதிகளில் 20 சென்டி மீட்டருக்கும் மேல் மழை பெய்தது. மேலும், சென்னை ஒட்டியுள்ள தாம்பரம், சோழவரம், எண்ணூர் உள்ளிட்ட பகுதிகளிலும் அதி கனமழை பதிவாகியிருந்தது.

இந்நிலையில், காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று (நவம்பர் 11) மாலை ஸ்ரீ ஹரிகோட்டாவுக்கும், கடலூருக்கும் இடையே கரையை கடக்கும் என்று கணிக்கப்பட்ட நிலையில், காற்றின் வேக மாறுபாட்டால் கரையை கடக்கின்ற பகுதிகள் மாறியது. அதன்படி மாமல்லபுரத்துக்கும், ஸ்ரீ ஹரிகோட்டாவுக்கும் இடையில் கரையை கடக்கும் என கூறப்பட்டது. ஆனால் அந்த திசையும் மாறியது.

இதன் பின்னர் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, விழுப்புரம் மாவட்டங்களில் பலத்த காற்று வீசக்கூடும் என்று கூறப்பட்டது. அதன்படி நேற்று (நவம்பர் 11) காலையில் இருந்து சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் தரைக்காற்று சுமார் 40 கி.மீ. முதல் 45 கி.மீ வரையில் வீசியது. ஆனால் எதிர்பார்த்தபடி எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. கடந்த சில நாட்களாக வெள்ளக்காடாக இருந்த சென்னை மக்களுக்கு சற்று ஆறுதலை தந்துள்ளது. இதனால் ரெட் அலார்ட் எச்சரிக்கை வாபஸ் பெறுவதாக வானிலை மையம் கூறியது.

Source, Image Courtesy: Daily Thanthi


Tags:    

Similar News