பள்ளி மாணவிக்கு நீதி கேட்டு போராடியவர்களை கட்டுப்படுத்த துப்பாக்கிச்சூடு - உச்சகட்ட பரபரப்பில் கள்ளக்குறிச்சி!
கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே தனியார் பள்ளியில் 12ம் வகுப்பு மாணவி ஸ்ரீமதி மர்மமான முறையில் உயிரிழந்தார். இதனை பள்ளி நிர்வாகம் தற்கொலை செய்ததாக கூறப்படும் நிலையில், மாணவியின் பெற்றோர் இது கொலை என்று கூறி சடலத்தை வாங்க மறுத்து அறவழியில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், சின்னசேலத்தில் உள்ள தனியார் பள்ளியை கண்டித்து இன்று நீதி கேட்டு மாணவர் அமைப்பினர் மற்றும் மாணவியின் உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது போலீசாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அங்கு செருப்பு மற்றும் கண்ணாடி பாட்டில்களை கொண்டு போலீசார் மீது போராட்டக்காரர்கள் வீசியதாக கூறப்படுகிறது. இதில் பாதுகாப்புக்கு வந்திருந்த போலீசார் சிலர் காயம் அடைந்தனர்.
இந்த சம்பவத்தால் அப்பகுதியில் தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவி வருகிறது. தொடர்ந்து போலீசார் வாகனத்திற்கும் போராட்டக்காரர்கள் தீ வைத்ததாக கூறப்படுகிறது. போராட்டம் கலவரமாக மாறியதால் கட்டுக்குள் கொண்டு வருவதில் போலீசார் திணறி வருகின்றனர். பள்ளியின் உள்ளே புகுந்த போராட்டக்காரர்கள் அங்கு கற்களை வீசி கண்ணாடிகளை அடித்து நொறுக்கினர். மேலும், பள்ளியில் இருந்த பொருட்களை சூறையாடினர்.
இதனால் போராட்டக்காரர்களை கட்டுப்படுத்த போலீசார் வானத்தை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதனால் போராட்டக்காரர்கள் நாலாபுறமும் சிதறி ஓடினர். இந்த சம்பவத்தால் கள்ளக்குறிச்சி மாவட்டம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கூடுதல் போலீசார் வரவழைக்கப்பட்டிருப்பதாக தகவல் கூறுகின்றனர்.
Source, Image Courtesy: Daily Thanthi