கோவிலுக்குள் செருப்பு, குப்பை - அறங்கெட்ட துறை அதிகாரிகளின் லட்சணம்.!
கோவிலுக்குள் செருப்பு, குப்பை - அறங்கெட்ட துறை அதிகாரிகளின் லட்சணம்.!;

திருவல்லிக்கேணி அருகே அமைந்துள்ள திருவட்டீஸ்வரர் கோவிலில் கோவிலுக்குள் காலணியை விடுவதும் அறநிலையத் துறை ஊழியர்களே இத்தகைய இழி செயலில் ஈடுபடுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருவல்லிக்கேணி அருகே தேவாரத்தில் அப்பரால் பாடப்பெற்ற தலம் என்று கூறப்படும் திரவட்டீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. அப்பரால் வெடிச்சுரம் என்று பாடப் பெற்ற இது, ஏழாம் நூற்றாண்டில் இருந்தே பெருமை பெற்று விளங்கிய தலம் என்று கூறப்பட்டாலும் இதன் தோற்றம் குறித்த குழப்பம் நிலவுகிறது.
சமுத்திர முதலி என்ற கணக்குப்பிள்ளை ஒருவர் தற்போதுள்ள கோவிலை எழுப்பியதாகக் கூறப்படுகிறது. அப்போது இந்த இடத்தில் ஒரு நதி ஓடிக் கொண்டிருந்ததாகவும், கர்நாடக நவாபுக்குச் சொந்தமாக இருந்த அந்த இடத்தை கிழக்கிந்தியக் கம்பனியில் கணக்குப்பிள்ளையாக பணிபுரிந்த சமுத்திர முதலி விலைக்கு வாங்கி திருவட்டீஸ்வரருக்கு கோவில் எழுப்பியுள்ளார்.
தனது சொந்த பணத்தில் கோவிலைச் சுற்றி பிராமணர்கள் வசிக்க நான்கு தெருக்களும் அதைச் சுற்றிய குடியிருப்புகளும் திருவட்டீஸ்வரன் பேட்டை என்ற பெயரில் ஏற்பட காரணமாக இருந்திருக்கிறார் சமுத்திர முதலி. மேலும் தற்போது ராயப்பேட்டையில் உள்ள புதுப்பாக்கம் என்ற கிராமத்தை ஒரு நவாப் வம்சத்தைச் சேர்ந்தவரிடம் இருந்து விலைக்கு வாங்கி அதை கோவிலுக்கு தானமாக வழங்கி இருக்கிறார்.
முதலில் வேதம் பயின்ற பிராமணர்களுக்காக வழங்கப்படும் ஸ்ரோத்தரியம் என்ற பெயரில் இந்த நிலங்கள் ஆங்கிலேயர் காலத்தில் பதிவு செய்யப்பட்டிருந்த போதும், இந்த நிலத்தில் தற்போது பல மதங்களைச் சேர்ந்தவர்களும் வீடுகளும் கடைகளும் கட்டி வசித்து வரும் நிலையில், பல ஆண்டுகளாக இந்த நிலம் கோவிலுக்கு சொந்தமானது அல்ல என்று நீதிமன்றத்தில் சட்டப் போராட்டம் நடந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த கோவிலில் தான் ராஜகோபுரத்தில் கோவிலுக்கு உள்ளேயும் காலணிகளை விட்டுச் செல்வதோடு கோவிலின் உட்பகுதியில் சுவாமி புறப்பாடு செய்யும் வாகனங்கள் வைக்கப்பட்டுள்ள இடத்தில் குப்பைகள் கொட்டப்பட்டு அசுத்தமாக உள்ளதாக பக்தர் ஒருவர் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.