ஆக்சிஜன் பற்றாக்குறை இல்லை.. தமிழக அரசு உயர் நீதிமன்றத்தில் தகவல்.!
தமிழகத்தில் இருந்து பிற மாநிலங்களுக்கு ஆக்சிஜன் அனுப்பப்படுவதால், தமிழ்நாட்டில் வென்டிலேட்டர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது என்று ஊடகங்கள் செய்தி வெளியிட்டது.
தமிழகத்தில் இருந்து பிற மாநிலங்களுக்கு ஆக்சிஜன் அனுப்பப்படுவதால், தமிழ்நாட்டில் வென்டிலேட்டர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது என்று ஊடகங்கள் செய்தி வெளியிட்டது. அந்த செய்திகளை அடிப்படையாக வைத்துக் கொண்டு சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சிப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் கொண்ட அமர்வு தாமாக பொதுநல வழக்கை எடுத்து விசாரித்தனர்.
இந்த வழக்கு குறித்து அட்வகேட் ஜெனரல் விஜய் நாராயணனிடம் நீதிபதிகள் தகவல் தெரிவித்தனர். அப்போது மற்ற மாநிலங்களில் உள்ள நிலைமை தமிழகத்திலும் ஏற்படக்கூடாது என அட்வகேட் ஜெனரலிடம் நீதிபதிகள் கூறினர். அப்போது இந்த வழக்கு குறித்து தமிழக அரசிடம் விளக்கம் பெற்று, இன்று பிற்பகல் தெரிவிக்கும்படி கூறியிருந்தனர்.
இந்நிலையில், இந்த வழக்கு இன்று பிற்பகல் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசு சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், தமிழகத்தில் தற்போது வரை ஆக்சிஜன் மற்றும் வென்டிலேட்டர் பற்றாக்குறை எதுவும் இல்லை என கூறப்பட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள ஒரு சில செய்தி ஊடகங்கள் வென்டிலேட்டர் மற்றும் ஆக்சிஜன் பற்றாக்குறை என்று செய்திகளை வெளியிட்டு வருகிறது. இது போன்ற தொலைக்காட்சி மற்றும் செய்திதாள்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.