சிவகங்கை: தலித் பெண் ஊராட்சி மன்ற தலைவருக்கு சாதி ரீதியாக நெருக்கடி? ராஜினாமா செய்ய முடிவு.!

சிவகங்கை: தலித் பெண் ஊராட்சி மன்ற தலைவருக்கு சாதி ரீதியாக நெருக்கடி? ராஜினாமா செய்ய முடிவு.!

Update: 2020-11-09 12:58 GMT

தலித் மக்களுக்கு அரசியல் ரீதியாக அதிகாரம் கிடைத்தாலும் அவர்களை சமூகரீதியாக தரம் தாழ்த்தி நடத்துவதில் கட்சிகள் ஒன்றுக்கு ஒன்று சளைத்ததல்ல என்பது தொடர்ந்து நிரூபணமாகி வருகிறது. சமீபத்தில் தான் கடலூர் மாவட்டத்தில் தலித் பெண் பஞ்சாயத்து தலைவர் ராஜேஸ்வரி, அலுவலக கூட்டங்களின் போது தரையில் உட்கார வைக்கப்பட்ட புகைப்படமும் செய்தியும் வைரலாகி தேசிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. 

அப்பெண் தலித் தலைவர் ராஜேஸ்வரியை தேசியக்கொடி கூட ஏற்ற கூட விடவில்லை என்ற குற்றச்சாட்டு பதிவானது. செய்தி வைரல் ஆன பிறகு ஊராட்சி மன்ற செயலாளர் தலைமறைவாகி, பிறகு கைது செய்யப்பட்டார். தற்பொழுது சிவகங்கை அருகே, மற்றொரு தலித் ஊராட்சி மன்ற தலைவர் ராஜேஸ்வரி ஜாதி ரீதியாக தொடர் நெருக்கடிக்கு ஆளாவதாக புகார் அளித்துள்ள செய்தியை வெளியிட்டுள்ளது தினகரன் நாளிதழ். 

பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படாததால் அவர் அப்பதவியை ராஜினாமா செய்ய முடிவெடுத்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த தேர்தலில் பொது தொகுதியாக இருந்த கால்பிரவு ஊராட்சி தற்போது தனித் தொகுதியாக மாற்றப்பட்டு ராஜேஸ்வரி போட்டியின்றி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனால் துணை தலைவர் நாகராஜன், மற்ற ஊராட்சி உறுப்பினர்கள் அவருக்கு ஒத்துழைப்பு வழங்கவில்லை என குற்றம் சாட்டுகிறார் ராஜேஸ்வரி.

துணைத் தலைவர் நாகராஜன் ஆளுங்கட்சியான அ.தி.மு.கவைச் சேர்ந்தவர் அவர் தலைமையில் தான் கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன என கூறப்படுகிறது. இது குறித்து ராஜேஸ்வரி அளித்துள்ள புகாரில், தேர்ந்தெடுக்கப்பட்டு ஒரு வருடம் ஆகியும் தன் தொகுதியில் நலத்திட்டங்களை செயல்படுத்த முடியவில்லை எனவும், ஜாதி ரீதியாக தொடர்ந்து மிரட்டப்படுவதுடன் தன்னுடன் வார்டு உறுப்பினர்கள் யாரும் பேசக்கூடாது என நிர்பந்திக்கப் படுவதாக குற்றம் சாட்டி இருக்கிறார். தன்னுடைய வங்கி பாஸ்புக்கைகூட பிடுங்கி வைத்துக் கொண்டதாகவும் கூறுவதாக தினகரன் நாளிதழ் தெரிவிக்கிறது. 

இதுகுறித்து மானாமதுரை ஊராட்சி மன்ற ஆணையாளரிடம் பலமுறை புகார் அளித்தும் பலன் இல்லை எனவும் இதனால் விரக்தி அடைந்த ராஜேஸ்வரி பதவியை ராஜினாமா செய்ய முடிவெடுத்து இருப்பதாகவும் கூறப்படுகிறது.  கடந்த முறை போல இம்முறையும் சமூக வலைத்தளங்கள் நியாயம் பெற்றுத் தருமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

Similar News