ருத்ரகோடீஸ்வரர் கோயில் ரதவீதி சாலை : அரசியல் கட்சியினரின் ஈகோவால் சரி செய்யாமல் இருக்கும் அவலம் !

Update: 2021-11-25 07:46 GMT

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே திருக்கோயிலின்   ரதவீதியை வைத்து அரசியல்  கட்சியினர்  அரசியல் செய்து வருவதால்  சாலைப்பணி மேற்கொள்ளாமல் இருப்பது அப்பகுதி மக்களை கடுப்பேற்றியுள்ளது.   

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி ஒன்றியத்தில் உள்ளது  சதுர்வேதமங்கலம் ஊராட்சி, அங்கே பிரசித்திப்பெற்ற  குன்றக்குடி ஆதினத்துக்கு உட்பட்ட பழமையான ருத்ரகோடீஸ்வரர் கோயில் உள்ளது. இக்கோயிலுக்கு விசேஷ நாட்களில் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து பக்தர்கள் வந்து செல்கின்றனர்.

இக்கோயிலில் புகழ்பெற்ற  மாசித்திருவிழா இன்னும் 3 மாதத்தில் வரவுள்ள நிலையில், தேர் திருவிழா நடத்துவதில் சிக்கல் :

திருக்கோயிலைச் சுற்றியுள்ள  ரதவீதி பழுதடைந்துள்ளது. பழுதடைந்த சாலைகளை சரி செய்ய  ரூ.14 லட்சம் செலவில் தார்சாலை அமைக்க 2019 ல் அ.தி.மு.க., ஆட்சியின்போது டெண்டர் விடப்பட்டது. டெண்டர் எடுத்தவர்கள் பணிகளை துவக்காமல் கால தாமதம் செய்ததோடு மட்டுமில்லாமல்  வெவ்வேறு நபர்களுக்கு கைமாற்றி விட்டனர்.

இந்நிலையில்  தி.மு.க., அரசு அமைந்த பின்னர், டெண்டர் எடுத்தவர்கள் சாலைகளின்  கற்களை கிளறி  பணியை தொடங்கினர். தி.மு.க.,வினர் அதிகாரத்திற்கு வந்து விட்ட நிலையில் சாலை பணியை தொடர எதிர்ப்பு தெரிவித்து டெண்டரை ரத்து செய்ய வைத்தனர். 5 மாதங்களுக்கு மேலாகியும் சாலையை மீண்டும் சீரமைக்க அதிகாரிகள் எந்த வித  நடவடிக்கையும் எடுக்கவில்லை. 

ஊராட்சி மன்றத்தில் ஈகோ தலைதூக்கியதே காரணம் :

 சதுர்வேதமங்கலம் ஊராட்சியில் தலைவர், துணைத் தலைவர் மற்றும் உறுப்பினர்களுக்கு இடையே பிரச்னை  நிலவுவதால் ஊராட்சி கூட்டம் நடத்தி தீர்மானம் நிறைவேற்ற முடியாத நிலை உள்ளது.

அரசியல் கட்சிகள் தங்கள் அகந்தையை விட்டுவிட்டு, இறைபணிக்கு இடையூறு ஏற்படாதவாறு செயல் பட வேண்டும் என அப்பகுதி மக்கள் கூறிவருகின்றனர்.

Dinamalar


Tags:    

Similar News