புயல் முன்னெச்சரிக்கை.. பொதுமக்களுக்கு முக்கிய அறிவிப்பு வெளியிட்ட தமிழ்நாடு பேரிடர் முகமை.!

புயல் முன்னெச்சரிக்கை.. பொதுமக்களுக்கு முக்கிய அறிவிப்பு வெளியிட்ட தமிழ்நாடு பேரிடர் முகமை.!

Update: 2020-11-23 06:43 GMT

நவம்பர் 25ம் தேதி மாமல்லபுரம்- காரைக்கால் இடையே புயல் கரையை கடக்கிறது என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. தெற்கு வங்கக் கடலின் மத்திய பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி 23ம் தேதி உருவாகும் என அறிவித்த நிலையில் அது நேற்றே உருவானது. இதன் பாதையை வானிலை மையம் கணித்துள்ளது.


இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானதால் தமிழகத்தில் நாளை முதல் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக அறிவித்தது. இந்நிலையில் நவம்பர் 25-ஆம் தேதி புயல் கரையை கடக்கும் என சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.


புயல் ஏற்படும்போது என்னென்ன முன்னெச்சரிக்கை எடுக்க வேண்டும் என்பன பற்றி தமிழ்நாடு பேரிடர் மீட்பு முகமை வெளியிட்டுள்ள தகவல்: பொதுமக்கள் தங்களின் அடையாள ஆவணங்களை பாதுகாப்பாக வைத்துக்கொள்ளுங்கள். தமிழகத்தை நோக்கி புயல் வரும் நிலையில் ஆதார், வாக்காளர் அட்டை உள்ளிட்ட அடையாள ஆவணங்களை, நீர் படாத வகையில் பாதுகாப்பாக வைத்துக்கொள்ள வேண்டும் 

வங்கக் கடலில் உருவாகும் ‘நிவர்’ புயல் தமிழக கரையை நோக்கி நகர்ந்து வருகிறது. இது காரைக்கால் - மாமல்லபுரம் இடையே வரும் 25-ம் தேதி பிற்பகல் கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், பொதுமக்கள் எடுக்க வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள்: புயல்கள் பெரும்பாலும் மக்களின் வீடுகளையும், சொத்துக்களையும் கடுமையாக சேதப்படுத்தக்கூடும். இது போன்ற நேரங்களில் சாதுர்யமாக செயல்பட வேண்டியது அவசியம். அதனால் குடிக்க உகந்த நல்ல நீரை போதுமான அளவுக்கு பாதுகாப்பாக சேமித்து வைத்துக்கொள்ள வேண்டும்.

அவசர காலம் மற்றும் அன்றாடம் தேவைப்படும் மருந்து பொருட்களை தயாராக வைத்திருக்க வேண்டும். உறுதியான கயிறுகள், காற்றை சமாளித்து எரியும் அரிக்கேன் விளக்குகள் வைத்திருக்க வேண்டும். மேலும் பேட்டரியில் இயங்கும் டார்ச் லைட்டுகள், போதுமான பேட்டரிகள், பேரிச்சை, திராட்சை போன்ற உலர்ந்த பழ வகைகள், வறுத்த வேர்க்கடலை மற்றும் மூக்குக் கடலை, மெழுகு வர்த்தி, தீப்பெட்டி, மண்ணெண்ணெய் ஆகியவற்றை போதுமான அளவு இருப்பு வைத்திருக்க வேண்டும்.

இது மட்டுமின்றி அடையாள ஆவணங்களான ஓட்டுநர் உரிமம், ஆதார் அட்டை, வாக்காளர் அட்டை, வங்கிக் கணக்கு புத்தகங்கள், 
கல்விச் சான்றிதழ்கள், சொத்து பத்திரங்கள் உள்ளிட்ட ஆவணங்களை நீர் படாத வகையில் பிளாஸ்டிக் உரைகளைக் கொண்டு பாதுகாப்பாக கட்டி வைக்க வேண்டும்.

புயல் வருவதற்கு முன்பு, வீட்டின் கதவுகள், ஜன்னல் கதவுகளை பழுது பார்த்து வைத்திருக்க வேண்டும். வீட்டின் அருகில் உள்ள காய்ந்த மரங்கள், விளம்பர பலகைகள் உள்ளிட்டவற்றை அகற்ற வேண்டும்.


புயல் கரையை கடக்கும்போது, குறைந்தபட்சம் 24 மணி நேரத்துக்கு வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும். பேட்டரி மூலம் இயங்கும் வானொலி பெட்டி மூலம் அறிவிக்கப்படும்  வானிலை நிலவரங்களை கேட்டு தெரிந்துக்கொண்டு, அதன்படி செயல்படலாம். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
 

Similar News