இசைக்கான "பத்ம ஸ்ரீ" விருது பெறும் முதல் தென்னிந்திய இஸ்லாமியப் பெண்மணி - தமிழ் சாதனையாளர்களை அங்கீகரிக்கும் மத்திய அரசு!
பெண்கள் தங்கள் மண்ணின் இசையைக் கையில் எடுக்க வேண்டும், காலிஷா பீயைப் போல புகழ்பெற வேண்டும்
நாகசுர இசைக் கலைஞர்களான காலிஷா பீ, அவரின் கணவரான ஷேக் மெகபூப் சுபானி ஆகிய இருவருக்கும் கலைத்துறைக்கான பத்மஸ்ரீ விருதுவழங்கப்பட்டுள்ளது. இசைக்கான பத்ம விருது பெறும் முதல் தென்னிந்திய இஸ்லாமியப் பெண்மணி என்ற பெருமையும் காலிஷா பெற்றிருக்கிறார்.
ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டத்தைச் சேர்ந்த சிருக்குருபாடு என்ற சிற்றூரில் 1961 நவம்பர் 21 அன்று ஷேக் மீரா சாகிபு, ஷேக் மீராபீ தம்பதியின் ஒரே மகளாகப் பிறந்து வளர்ந்தவர் காலிஷா பீ.
பாரம்பர்யமான இசைக்குடும்பத்தை சேர்ந்த அவருடைய, அப்பா மற்றும் சித்தப்பா ஷேக் ஜான் சாகிபு ஆகிய இருவரும் நாகசுரக் கலைஞர்கள். அம்மா வாய்ப்பாட்டு பாடக்கூடியவர். எட்டாவது தலைமுறையாக அவரும் நாகசுரம் கற்றுக்கொண்டார்.
ஐந்து வயது முதலே தந்தையிடம் சங்கீதம் பயின்றவர். ஒன்பது வயது முதல் சித்தப்பாவுடன் இணைந்து மேடைக் கச்சேரிகள் செய்யத் தொடங்கினார். அவர் கணவர் ஷேக் மெகபூப் சுபானி, குண்டூர் மாவட்டம் சிலகலூரிப்பேட்டை ஜனாப் ஷேக் பீர் சாகிபு என்ற இசைக்கலைஞரின் பேரன். இவர்கள் இருவருக்கும் 1977 டிசம்பர் 1 அன்றுதிருமணம் நடந்தது.
1983-ம் ஆண்டு, திருச்சி உறையூரில் ஒரு வாடகை வீட்டுக்குக் குடிபெயர்ந்தனர். மீராபாய், பர்வீன் சுல்தானா என்று அடுத்த இரு குழந்தைகளும் பிறந்தார்கள். 1994 ஜூலை 29 அன்று ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது, இருவருக்கும் 'கலைமாமணி விருது' தந்து கௌரவித்தார்கள். மத வேறுபாடு பார்க்காமல் இன்றளவும் இவர்கள் செய்து வரும் சாதனையை கண்ட மத்திய அரசு, பத்ம ஸ்ரீ விருது வழங்கி கௌரவித்துள்ளது.