அதிஉஷார் நிலையில் தமிழகம்! மணிக்கு 120 கி.மீ வரை அதிகரிக்கும் புயல் காற்றின் வேகம் - மத்திய அரசு தீவிரகண்காணிப்பு!
அதிஉஷார் நிலையில் தமிழகம்! மணிக்கு 120 கி.மீ வரை அதிகரிக்கும் புயல் காற்றின் வேகம் - மத்திய அரசு தீவிரகண்காணிப்பு!
வங்கக் கடலில் புயல் உருவாகும் சூழல் உள்ளதால், அதை எதிர்கொள்ள தயார்நிலையில் இருக்கும்படி தமிழகம், புதுவை மற்றும் ஆந்திரப் பிரதேச தலைமை செயலாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. இந்த புயலால் உயிரிழப்பு எதுவும் ஏற்படக் கூடாது என்றும், பாதிக்கப்படும் பகுதிகளில் மீட்பு நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்றும் அமைச்சரவை செயலாளர் குறிப்பிட்டார்.
மீனவர்கள் கடலுக்கு செல்ல கூடாது என்ற அறிவுறுத்தலை கடுமையாக அமல்படுத்த வேண்டும் என அவர் தெரிவித்தார். பாதுகாப்பற்ற வீடுகளில் வசிப்பவர்களுக்கு, நிலைமைக்கேற்ப தேவையான ஆலோசனைகளை வழங்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
தென் மேற்கு மற்றும் அதனையொட்டிய தென் கிழக்கு வங்க கடலில் உருவாகியுள்ள காற்றழுத்தம், கடந்த 6 மணி நேரத்தில் வடமேற்கு நோக்கி நகர்ந்து, புதுச்சேரிக்கு தெற்கு - தென்கிழக்கே 600 கி.மீ தொலைவிலும், சென்னைக்கு தெற்கு - தென்கிழக்கு திசையில் 630 கி.மீ தொலைவிலும் மையம் கொண்டுள்ளது.
இது அடுத்த 24 மணி நேரத்தில் புயலாக மாறும் வாய்ப்புள்ளது. இது தமிழக மற்றும் புதுச்சேரி கடற்கரை பகுதியில் காரைக்கால் மற்றும் மாமல்லபுரத்துக்கு நடுவே நவம்பர் 25-ம் தேதி மதியம் கரையை கடக்கும் எனத் தெரிகிறது.
இந்த புயல் காரணமாக தமிழகம் மற்றும் ஆந்திர கடலோர பகுதிகளில் 23-ம் தேதி முதல் காற்றின் வேகம் மணிக்கு 45 கிலோ மீட்டரில் தொடங்கி படிப்படியாக அதிகரித்து 120 கி.மீ வரை அதிகரிக்கும் வாய்ப்புள்ளது.
புயல் காரணமாக கடல் கொந்தளிப்பாக காணப்படும் என்பதால், தென்மேற்கு மற்றும் அதனையொட்டிய மேற்கு மத்திய மற்றும் தென்கிழக்கு வங்க கடல் பகுதி, மன்னார் வளைகுடா, தமிழக, புதுச்சேரி மற்றும் தெற்கு ஆந்திர கடலோர பகுதிக்கு நவம்பர் 23ம் தேதி முதல் 25-ம் தேதி வரை மீனவர்கள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகின்றனர். ஏற்கனவே கடலுக்கு சென்றவர்கள் கரை திரும்பும்படியும், மேலே கூறிய கடல் பகுதிகளை தவிர்க்கும்படியும் அறிவுறுத்தப்படுகின்றனர்.