கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் அவலம் ! ஃபிலிம் வாங்க அரசிடம் காசு இல்லையாம், அதனால் பேப்பரில் ஸ்கேன் ரிசல்ட் !

தமிழகத்தில் தற்பொழுது சட்ட ஒழுங்கு மற்றும் நிர்வாக சீர்கேடு தலைதூக்கியுள்ளது.

Update: 2021-10-04 08:04 GMT

திமுக அரசு பதவியேற்றது முதல் தமிழக ஊடகங்கள் திமுக அரசை பெருமை பாட ஆரமித்துவிட்டது. ஏதோ திமுக அரசு முன்னெடுக்கும் அனைத்து செயல்பாடுகளும் மக்களின் நலன் கருதி மக்களின் நலன் காக்க எடுக்கப்படும் செயல்களாக தமிழக ஊடகங்கள் ஒரு பிம்பத்தை உருவாக்கி வைத்துள்ளனர்.    

ஆனால் முந்தைய ஆட்சியை விட தமிழகத்தில் தற்பொழுது சட்ட ஒழுங்கு மற்றும் நிர்வாக சீர்கேடு தலைதூக்கியுள்ளது.

அதற்கு ஒரு தக்க முன்னுதாரணமாக, தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் டிஜிட்டல் எக்ஸ்ரே பிரிவில் கடந்த இரண்டு மாதங்களாக பிலிம் இல்லை என்பதால் பேப்பரில் சிறிய முடிவுகளை நோயாளிகளுக்கு  கொடுப்பதால் மருத்துவர்கள் குழப்பமடைந்து தரமான சிகிச்சை அளிக்க முடியாத அவலநிலை ஏற்பட்டுள்ளது.

கோவில்பட்டி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை, கோவில்பட்டி நகர் மட்டுமன்றி நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர் என 4 மாவட்ட மக்கள் இந்த மருத்துவமனையில் தினந்தோறும் சிகிச்சை பெற்று பயனடைந்து வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த 2 மாதங்களாக சிகிச்சை பெறுபவர்களுக்கு டிஜிட்டல் எக்ஸ்ரே பிரிவில் பிலிம்  இல்லாத காரணத்தினால் எக்ஸ்ரே முடிவுகளை பேப்பர் மற்றும் வாட்ஸ் அப்பில் அனுப்பும் அவலநிலை ஏற்பட்டுள்ளது.

பிலிமில் எடுக்கப்பட்டால் தான் பாதிப்புகள் குறித்து எளிதில் அறிந்து அதற்கேற்ற வகையில் சிகிச்சை அளிப்பதற்கு மருத்துவர்களுக்கு வசதியாக இருக்கும். பேப்பரில் எடுத்து தருவதால் பாதிப்புகள் குறித்து சரியான முறையில் அறிந்து கொள்ள முடியாத நிலை மருத்துவர்களுக்கு உருவாகி உள்ளது.

பேப்பரில் முடிவுகள் சரியாக இருக்காது என்று எண்ணி மக்கள் மீண்டும் தனியார் ஸ்கேன் மையங்களுக்கு சென்று அங்கே ஸ்கேன் முடிவுகளை பிலிம்மில்  பெற்றுக்கொண்டு மீண்டும் அரசு மருத்துவரிடமே முடிவுகளை ஒப்படைத்து சிகிச்சைகளை மேற்கொள்கின்றனர்.

அரசு மருத்துவமனையில் ஃபிலிம் மூலமாக எடுக்கப்படும் பிரிவுக்கு 50 ரூபாய் வசூலிக்கப்படும் ஆனால் தற்பொழுது தனியார் மையங்களில் 400 ரூபாய் முதல் 500 ரூபாய் வரை செலவழித்து பொதுமக்கள் தங்கள் ஸ்கேன் முடிவுகளை பெற்று வருகின்றன.

ஸ்கேன் முடிவுகளை வாட்ஸப்பில் அளிப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தாலும், கிராமப்பகுதியில் ஆண்ட்ராய்ட் மொபைல் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு. அதனால் எப்படி கிராம மக்கள் எக்ஸ்ரே முடிவுகளை வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள முடியும் என்ற கேள்வி எழுந்துள்ளது.

இதுகுறித்து மருத்துவமனை நிர்வாகத்திடம் கேட்டபோது :  பிலிம் வாங்க போதிய நிதி இல்லை என்றும், தற்பொழுது தான் ஃபிலிம் வாங்க நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்றும்,  விரைவில் பிலிம் மூலமாக ஸ்கேன் முடிவுகள் வழங்கப்படும்  என்றும், மருத்துவமனை நிர்வாகம் கூறியுள்ளது.

கொரோனா  பெருந்தொற்று காலத்திலேயே இப்படி இந்த சுகாதார துறை நிர்வாகம் சீர்கேடாக அமைந்துள்ளது அப்பகுதி மக்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.

News 18 Tamil

Tags:    

Similar News