தமிழகத்திலிருந்து, மாலத்தீவிற்கு நேரடி கப்பல் சேவை.. சொன்னதை செய்தார் பிரதமர் மோடி..
இந்தியாவிலிருந்து மாலத்தீவிற்கு நேரடி கப்பல் சேவையை துவக்கம்.
மத்திய துறைமுகங்கள், கப்பல் மற்றும் நீர்வழிப் போக்குவரத்து இணை அமைச்சர் சாந்தனு தாக்கூர் அவர்கள் தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தில் இந்தியாவிலிருந்து மாலத்தீவிற்கு நேரடி கப்பல் சேவையை கொடி அசைத்து துவக்கி வைத்தார்கள். இச்சேவையை துவக்கி வைத்து மத்திய துறைமுகங்கள், கப்பல் மற்றும் நீர்வழிப் போக்குவரத்து இணை அமைச்சர் அவர்கள் பேசுகையில் இந்தியாவிற்கும் மாலத்தீவிற்கும் இடையேயான இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவதற்கு இக்கப்பல் சேவை மேலும் ஒரு மைல்கல்லாக அமையும் என்று குறிப்பிட்டார். மேலும் இக்கப்பல் சேவை இருதரப்பு வர்த்தகத்தை அதிகரிப்பது மட்டுமல்லாமல் மாலத்தீவு மற்றும் இந்திய மக்களிடையே நல்லுறவினை மேம்படுத்துதற்கும் உறுதுணையாக இருக்கும் என்று கூறினார்.
வ.உ.சிதம்பரனார் துறைமுக ஆணையத் தலைவர் தா.கி. ராமச்சந்திரன் அவர்கள் தனது உரையில் வ.உ.சிதம்பரனார் துறைமுகம் குறைந்த செலவில் நிறைந்த சேவைகளை வழங்குவதற்கு உறுதிபூண்டுள்ளது என்று கூறினார். மேலும் அவர் இந்தியாவிற்கும் மாலத்திற்கும் இடையேயான இரு தரப்பு வர்த்தகம் 323.9 மில்லியன் அமெரிக்கா டாலர்களாக அதிகரித்துள்ளது என்றும் இரு நாடுகளின் வர்த்தக சமூகத்தை இணைப்பதில் இந்தியா, மாலத்தீவு இடையேயான நேரடியான இச்சேவை முக்கியப் பங்கு வகித்துள்ளது என்பது மகிழ்ச்சி அளிக்கிறது என்று கூறினார். இந்தியா, மாலத்தீவின் 3வது பெரிய வர்த்தக பங்காளியாவதோடு நம்பகமான கடல் வர்த்தக போக்குவரத்து இணைப்பு சர்வதேச வர்த்தகம் மற்றும் வணிகத்தை மேலும் மேம்படுத்தும் என்று கூறினார்.
மேலும் இந்திய கப்பல் கழகத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் கேப்டன் பி.கே. தியாகி அவர்கள் தனது உரையில், இந்திய கப்பல் கழகம் மூலம் இயக்கப்படும் இந்த சரக்குபெட்டகச் சேவை, பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் 2019-ம் ஆண்டு ஜுன் மாதம் தனது மாலத்தீவு பயணத்தின் போது அளித்த உறுதி மொழியை உறுதியுடன் நிறைவேற்றும் வண்ணம் இச்சேவை துவக்கப்பட்டுள்ளது. இக்கப்பல் சேவையை இந்திய கப்பல் கழகம் மாதத்திற்கு 3 முறை இயக்கும். இச்சேவையின் மூலம் குறைந்த செலவில் சரக்குகளை நேரடியாக இந்தியாவிலிருந்து மாலத்தீவிற்கு எடுத்து செல்ல முடியும்.
Input & Image courtesy: News