தமிழகத்தில் 75 மையங்களில் நாளை வாக்கு எண்ணிக்கை.. தயார் நிலையில் அரசு ஊழியர்கள்.!

தமிழகத்தில் 234 சட்டமன்ற தொகுதிக்கும், கன்னியாகுமரி மக்களவை தொகுதிக்கும் கடந்த ஏப்ரல் 6ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது.

Update: 2021-05-01 03:59 GMT

தமிழகம் முழுவதும் 75 மையங்களில் நாளை (மே2) காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

தமிழகத்தில் தற்போது உள்ள சட்டப்பேரவையின் பதவி காலம் வருகின்ற 24ம் தேதியுடன் முடிகிறது. தமிழகத்தில் 234 சட்டமன்ற தொகுதிக்கும், கன்னியாகுமரி மக்களவை தொகுதிக்கும் கடந்த ஏப்ரல் 6ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது.


 



இந்த தேர்தலில் அதிமுக தலைமையில் ஒரு அணியும், திமுக தலைமையில் ஒரு அணியும், நாம் தமிழர் கட்சி தனியாகவும், மக்கள் நீதி மய்யம், அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் உள்ளிட்ட 5 கட்சிகள் இந்த தேர்தலை சந்தித்துள்ளது. மொத்தமுள்ள 234 தொகுதியிலும் 3,998 வேட்பாளர்கள் களத்தில் இருந்தனர்.

மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 6 கோடியே 28 லட்சம் பேர் இருந்தாலும், அதில் 4 கோடியே 57 லட்சத்து 76 ஆயிரத்து 311 பேர் மட்டுமே வாக்களித்தனர். 234 தொகுதிகளிலும் சுமார் 88,937 பூத்களில் வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் பதிவான வாக்குப்பதிவு இயந்திரங்கள் 75 மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.




 


இதனிடையே, நாளை காலை வாக்கு எண்ணிக்கை 8 மணிக்கு தொடங்குகிறது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். அதற்கு அடுத்த படியாக வாக்குப்பதிவு இயந்திரத்தில் உள்ள வாக்குகள் எண்ணப்படும். இதற்காக வாக்கு எண்ணும் பணியில் மட்டும் 16,387 அரசு ஊழியர்கள் ஈடுபடுகின்றனர். தமிழகம் முழுவதும் 1 லட்சம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள் என கூறப்பட்டுள்ளது.

யார் வெற்றி பெறுவார்கள் என்ற எதிர்பார்ப்பு இப்போதிலிருந்து அனைத்து கட்சி தலைவர்களிடம் ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Similar News