திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அருகே குழந்தை வரம் வேண்டி கொதிக்கும் எண்ணெயில் வெறுங்கைகளில் வடையை எடுத்து நேர்த்திக்கடனை செலுத்தும் விநோத நிகழ்ச்சி நடைபெற்றது.
நேற்று தமிழகம் மட்டுமின்றி உலகத்தில் தமிழர்கள் வாழும் பல பகுதிகளில் தைப்பூசம் மிகவும் கோலாகலமாக நடைபெற்றது. அதே போன்று தமிழகத்தில் பழனி முருகன் கோயில், திருச்செந்தூர், வடலூர் வல்லலார் ஜோதி தரிசனம், மைலாப்பூர் ஸ்ரீகபாலீஸ்வரர் திருக்கோயில் உள்ளிட்ட இடங்களில் காவடி எடுத்து வழிபாடுகள் நடத்தப்பட்டது. மேலும், கொரோனா பெருந்தொற்று காரணத்தை காட்டி திமுக அரசு தேர் இழுப்பதை தடை செய்திருந்தது. இதனால் பல கோயில்களில் தேர் இழுக்காமலேயே பக்தர்கள் வழிபாடு நடத்திவிட்டு சென்றிருப்பதை பார்க்க முடிந்தது.
இந்நிலையில், திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அருகே உள்ள தொரப்பாடியில் அமைந்துள்ள பாலசுப்பிரமணியர் கோயிலில் தைப்பூசத் திருவிழா நடைபெற்றது. இதில் பக்தரகள் காவடி எடுத்தும், அலகு குத்தியும் தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். மேலும், குழந்தை வரம் வேண்டி கொதிக்கின்ற எண்ணெயில் வடை சுட்டு அதனை வெறும் கைகளினால் எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடனை செலுத்தியுள்ளனர். இது போன்று செய்வதால் குழந்தை வரம் எழுதில் கிடைப்பதாக ஐதீகம் என அப்பகுதி மக்கள் கூறியுள்ளனர்.
Source, Image Courtesy: News 7 Tamil