தஞ்சையில் மேலும் 20 கால்நடை கல்லூரி மாணவர்களுக்கு கொரோனா உறுதி.!
தஞ்சையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மாணவர்களின் எண்ணிக்கை 225 ஆக அதிகரித்துள்ளது.
தஞ்சாவூர், ஒரத்தநாடு கால்நடை கல்லூரியில் படிக்கும் 20 மாணவர்களுக்கு இன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட மாணவர்களின் எண்ணிக்கை 225ஆக உயர்ந்து உள்ளது.
இதற்கு முன்னர் தஞ்சை அம்மாபேட்டையில் உள்ள அரசு உதவிபெறும் பள்ளியில், கடந்த 2 வாரங்களுக்கு முன்னர் மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் உட்பட 52க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
இதனை தொடர்ந்து தொடர்பு வைத்திருந்த மாணவர்கள், பெற்றோர்கள் உட்பட அனைவருக்கும் பரிசோதனை நடைபெற்றது. இதனிடையே, தஞ்சை, கும்பகோணம், பட்டுக்கோட்டை உட்பட பல்வேறு பகுதிகளில் படிக்கும் மாணவர்கள், ஆசிரியர்கள் என நேற்று வரை 205 பேருக்கு தொற்று இருப்பது உறுதியானது.
தொற்று பரவல் தடுப்பதற்காக தஞ்சை மாவட்டத்தில் உள்ள அனைத்து, பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில், இன்று காலை வெளியான பரிசோதனை முடிவுகளில், ஒரத்தநாடு கால்நடை மருத்துவ கல்லூரியில் படித்த 20 மாணவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இதனால் தஞ்சையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மாணவர்களின் எண்ணிக்கை 225 ஆக அதிகரித்துள்ளது.
பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு தொடர்ந்து தொற்று உறுதி செய்யப்பட்டு வருவது, தஞ்சை மாவட்டத்தில் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களிடையே ஒரு பயத்தை ஏற்படுத்தியுள்ளது.